பேரறிவாளன் விடுதலை விவகாரம்: கவர்னர் பதவி விலகுவாரா? கி.வீரமணி கேள்வி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-05-19 21:01 GMT

பேரறிவாளன் விடுதலையை சுப்ரீம் கோர்ட்டு, தனக்குள்ள வாய்ப்பின்படி விடுதலை செய்து வரலாற்றுப் புகழ் வாய்ந்த மனித உரிமைக் காப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளிகள் விடுதலை செய்யப்படலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான் குற்றவியல் சட்டத்தின் நிலைப்பாடு. இந்த வழக்கின் தீர்ப்பு, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகளை முறையாக விளக்கப்படுத்துவதற்கும் உகந்ததாக அமைந்து உள்ளது. கவர்னர் மற்றும் அவரை இயக்கும் அதிகார வர்க்கம் ஆகியோர் அரசியலமைப்பு சட்டவிதிகளுக்குப் புறம்பான வகையில் அதிகார துஷ்பிரயோகம் செய்தது பற்றிய அவலத்தையும் வெளியாக்கும் ஒரு கலங்கரை வெளிச்ச தீர்ப்பும் ஆகும்.

அமைச்சரவை முடிவை ஏற்று செயல்படுவது தான் கவர்னரின் கடமை. அந்த கடமையை அவர் செய்யவில்லை. எனவே அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் எடுத்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, இந்த அரசியலமைப்பு சட்டநெறி பிறழ்ந்த நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டு சுட்டிக் காட்டிய பிறகும், பதவியில் நீடிப்பது ஆன்மிகம் பேசும் அவருக்கு உரிய தார்மிக பொறுப்புக்கு உகந்ததா? அவரது மனசாட்சி பதில் அளிக்குமா?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்