திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா நெடுந்தூரஓட்டப் போட்டிகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.;

Update: 2023-10-07 17:13 GMT

திருவண்ணாமலையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நெடுந்தூர ஓட்டப்போட்டிகள்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டுத் துறை சார்பில் மாரத்தானுக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் 17 வயது முதல் 25 வயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய பிரிவினருக்கும் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.

இதன்படி 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி அருகில் இருந்தும், 17 வயது முதல் 25 வயதுக்கும் உட்பட்ட ஆண்களுக்கு திருவண்ணாமலை காஞ்சி சாலை அபய மண்டபம் அருகில் இருந்தும், 17 வயது முதல் 25 வயதுக்கும் உட்பட்ட பெண்களுக்கும், 25 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அறிவொளி பூங்கா அருகில் இருந்தும் ஓட்ட போட்டிகள் தொடங்கின. இதில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானம் வரை ஓடி நிறைவு செய்தனர்.

400-க்கும் மேற்பட்டோர்...

நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாலமுருகன் தலைமை தாங்கினார். போட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டிகளில் 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள், பதக்கங்களும், 4 முதல் 10 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.1000-மும் 4 பிரிவுகளுக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவியர் விளையாட்டு விடுதி மேலாளர் சண்முகப்பிரியா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்