குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தின் நுழைவு பகுதி குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் தார் சாலை அமைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-11-02 18:56 GMT

புதிய பஸ் நிலையம்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, அரியலூர், சேலம், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தற்போது பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வரும் நுழைவு பகுதியில் உள்ள தார் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படும் மோசமாக காட்சியளிக்கிறது.

இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களின் டிரைவர்கள் பஸ்களை கடும் சிரமத்துடன் ஓட்டி வருகின்றன. மேலும் அதனருகே நிறுத்தி வைத்திருக்கும் வாடகை கார், வேன்களையும், அதன் டிரைவர்கள் அந்த வழியாக சிரமத்துடன் தான் சென்று வருகின்றனர். பழுதடைந்த சாலையை அகற்றி விட்டு புதிதாக தார் சாலை அமைத்து தர நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தும், அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுத்த பாடில்லை. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

புழுதி பறக்கும் சாலை

கார் டிரைவர் சதீஷ்வரன்:- பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்குள் நுழைவு பகுதியில் தார் சாலை கடந்த சில மாதங்களாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட தொடங்கியுள்ளது. இதனால் பஸ், கார், வேன்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களில் செல்வோரும் கடும் சிரமத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் சிலர் குழிகளில் வாகனத்தை இறக்கி செல்லும் போது கீழே விழுந்து விடுகின்றனர். மழைக்காலங்களில் குழிகளில் தண்ணீர் தேங்கி விடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயத்துடன் எழுந்து செல்கின்றனர்.

இந்த பகுதியில் புதிய தார் சாலை அமைக்குமாறு நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தால், அவர்கள் தற்காலிகமாக அந்த குழிகளில் மண்ணை போட்டு தான் நிரப்பி விட்டு செல்கின்றனர். அதுவும் பஸ்கள் வந்து செல்லும் போது புழுதியாக பறந்து விடுகிறது. எனவே நிரந்தர தீர்வாக தார் சாலை புதிதாக அமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாகனங்கள் பழுது

வேன் டிரைவர் ராஜேந்திரன்:- பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்குள் வரும் பகுதி படுமோசமாக காட்சியளிப்பது வாகன ஓட்டிகளை வருத்தமடைய செய்துள்ளது. குண்டும், குழியுமான இந்த சாலையில் வரும் வாகனங்கள் பழுதடைவது தொடர் கதையாகிறது. பஸ்கள் குண்டும், குழிகளில் இறங்கி வரும் போது எதிரே வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்ற நிலை ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் விரைந்து தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ்கள் தாமதம்

பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க துணைத்தலைவர் சிவானந்தம்:- குண்டும், குழியுமான தார் சாலையில் பஸ்கள் குலுங்கி, குலுங்கி வரும் போது, அதன் பின்னால் வரும் பஸ்கள் விபத்துக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. குண்டும், குழிகளை கடந்து வரும் அரசு பஸ்கள் தாமதமாக பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் புதிதாக தார் சாலையை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் அந்தப்பகுதியில் நுழைவு வாயில் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதில் மையத்தில் உள்ள 2 தூண்கள் போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. இதனை அகற்ற வேண்டும்.

புதிதாக தார் சாலை

அரசு பஸ் டிரைவர் பாலு:- குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தை போல் நான் எந்த பஸ் நிலையத்திலும் கண்டதில்லை. இந்த வழியாக பஸ்சை சிரமத்துடன் இயக்கி வருகிறேன். விரைந்து புதிய தார் சாலை அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதேபோல் சென்னை பஸ்கள் நிறுத்தம் இடத்திலும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் இடையூறாக அதிகளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு போதிய இடவசதி இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்