மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.3.60 லட்சம் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் வழங்கினார்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3.60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3.60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மாரியப்பன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 375 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா? என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு மின் கலம் பொருத்தப்பட்ட நான்கு சக்கர நாற்காலிகள் தலா ரூ.90 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையின் மூலம் கருணை அடிப்படையில் இரண்டு பேருக்கு அங்கன்வாடி பணியாளருக்கான பணி நியமன ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் கடையம் அருகில் உள்ள முதலியார்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரஹ்மத் நகர் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், தங்களது பகுதியில் 8 ஆண்டுகளுக்கு மேலாக 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய், தரமான சாலை எதுவும் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.