அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.;
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அதிகாரி கலைவாணியிடம் அளித்தனர். இதில் பா.ஜ.க. நகர தலைவர் மணிவண்ணன் அளித்த மனுவில், அரியலூர் பஸ் நிலையம், ராவுத்தன்பட்டி சாலை, ரெயில்வே நிலையம் மற்றும் ரெயில்வே கேட் அருகில் உள்ள மதுபான கடைகளால் பொதுமக்கள் மற்றும் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சந்தைகளில் போக்குவரத்திற்கு இடையூறு மற்றும் தேவையில்லாத தகராறுகள் ஏற்பட்டு வருகின்றன. ராவுத்தன்பட்டி சாலையில் மதுபான பிரியர்கள் குடித்துவிட்டு பாட்டிலை உடைத்து விடுகின்றனர். இதனால் பொதுமக்களின் கால்களில் உடைந்த பாட்டில்கள் குத்தி ரத்தம் வருகிறது. ரெயில் நிலையம் மற்றும் ரெயில்வே கேட் அருகே அமைந்துள்ள கடைகளால் மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு தண்டவாளத்திலேயே படுக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் மதுபானக்கடை அருகிலேயே சிவன் மற்றும் பெருமாள் கோவில் உள்ளன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.