மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.92 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர், ரூ.92 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.;

Update: 2023-04-11 15:12 GMT

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் அதன் மேல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக நடத்தப்பட்ட தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பயின்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 மாணவ மாணவியர்களை கலெக்டர் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பாக இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கிடையே மாநில அளவில் நடைபெற்ற குறும்பட கொண்டாட்ட நிகழ்வில் முதலிடம் பெற்ற பூந்தமல்லி இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலருக்கு ரூ.12 ஆயிரத்துக்கான காசோலையையும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற 6 தன்னார்வலருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரத்துக்கான காசோலையையும், சான்றிதழ்களையும், கேடயங்களையும் கலெக்டர் வழங்கினார்.

மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக 93 பயனாளிகளுக்கு அனைத்து திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தலா 8 கிராம் தங்க நாணயங்களுடன் கூடிய நிதி உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து கணவரை இழந்து வரிய நிலையில் வசிக்கும் ஒரு பயனாளிக்கு ரூ.25 ஆயிரமும் பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.20 ஆயிரமும் கறவை பசுவை இழந்த ஒரு விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் 3 பயனாளிகளுக்கு ரூ.55 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 16 மாற்று திறனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்