காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டு மனை பட்டா கேட்டு பிளேடால் கையை அறுத்துக்கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-21 09:45 GMT

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து 210 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் 11 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமன சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

அப்போது ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வெள்ளேரி கிராமத்தை சேர்ந்த நீலகண்டன் என்பவர், கடந்த 8 ஆண்டுகளாக தனக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட கோரி மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொடர்ந்து மனு அளித்து வருகிறேன். ஆனால் இது வரை வீட்டு மனை பட்டா வழங்கப்பட வில்லை என்று கூறி மீண்டும் மனு அளித்தார்.

பிளேடால் அறுத்தார்

அதற்கு அதிகாரிகள் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த சம்பந்தப்பட்ட இடத்தில் கோர்ட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகவே பட்டா வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த நீலகண்டன் திடீரென தனது பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடால் இடது கையை சரமாரியாக அறுத்து கொண்டு பட்டா வழங்க கோரி அதிகாரியிடம் முறையிட்டார்.

உடனடியாக போலீசார் நீலகண்டனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பித்ஜெயின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்