ரூ.2¼ லட்சம் கோடிக்கு முதலீடுகளை பெற்று சாதனை; தமிழகத்தை முன்னணி மாநிலமாக்குவோம்- மு.க.ஸ்டாலின்
‘தமிழகத்தை ‘ஸ்மார்ட்’ மாநிலமாக உருவாக்குவது தான் இந்த அரசின் இலக்கு’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.;
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் ரூ.1¼ லட்சம் கோடி முதலீட்டில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மு.க.ஸ்டாலின்
முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஓராண்டு காலத்திற்குள்6 முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதே ஒரு மிகப்பெரிய சாதனை. அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கம் என்பதை அடிப்படையாக கொண்ட 'திராவிட மாடல்' மாநிலத்தை நோக்கி இந்திய தொழில் அதிபர்கள், உலக நிறுவனங்கள் வரத்தொடங்கியதன் அடையாளமாக இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.
இன்று இந்த மாநாட்டில், நிதி நுட்பங்களுக்கான தொழில் திட்டங்களுக்காக சிறப்பு முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். 10 நாட்களுக்கு முன்புதான், மேம்பட்ட உற்பத்தி தொடர்பான ஒரு சிறப்பு மாநாட்டையும் நடத்தினோம். இந்த முதலீட்டு மாநாடுகளுக்கு உயர்ந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
முதலீட்டுக்கு உகந்த மாநிலம்
முதலாவதாக, தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். இரண்டாவதாக, தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும்.
மூன்றாவதாக, உலகத்தின் மூலை முடுக்கிற்கெல்லாம், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சென்றடைய வேண்டும். நான்காவதாக, மாநிலம் முழுவதும் முதலீடுகள் பரவலாகவும், சீராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்; அதன்மூலம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய வேண்டும்.
அபார நம்பிக்கை
இந்த இலக்குகளை அடைய தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் அனைத்து தொழில் முயற்சிகளும் இந்த 4 இலக்குகளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. இவை அனைத்தும், அனைத்து நிறுவனங்களது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதன் அடையாளம்தான் தமிழகத்தை நோக்கி தொழில் நிறுவனங்கள் வருவது.
தமிழ்நாடு அரசின் மீது அபார நம்பிக்கை வைத்து, தொழில் அதிபர்களும், தொழில் நிறுவனங்களும் இன்றைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முன்வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஸ்மார்ட் மாநிலம்
நம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முன்வந்திருக்கக்கூடிய உங்களையெல்லாம் மிகவும் மகிழ்ச்சியோடு, உற்சாகத்தோடு நான் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.
உங்கள் தொழில் திட்டங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், அனுமதிகளையும் பெறுவதற்கும், உங்கள் தொழில் சிறந்திடவும், உறுதுணையாக இருப்போம் என்று உங்களுக்கெல்லாம் நான் உறுதி தரக் கடமைப்பட்டிருக்கிறேன்.
உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் அளவுக்கு தமிழ்நாட்டை ஒரு ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவது தான் இந்த அரசின் இலக்கு.
ஊக்குவிப்பு சலுகை
இன்றைய தினம், இங்கே, 11 நிதிநுட்பத் திட்டங்களுக்கு நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்ல, நிதிநுட்ப ஆட்சிமன்ற குழு, நிதிநுட்பக் கொள்கையின் கீழ் ஊக்குவிப்பு சலுகை வழங்குவதற்கு 2 நிறுவனங்களைத் தேர்வு செய்திருக்கிறது. அந்த இரு நிறுவனங்களுக்கும் இன்று ஊக்கத்தொகுப்பு சலுகைகள் அளிப்பதற்கான ஆணைகள் அளிக்கப்பட்டிருக்கிறது.
இது வெறும் தொடக்கம்தான். நாங்கள் மேற்கொண்டுள்ள பயணத்தில், உங்கள் அனைவரின் ஈடுபாட்டையும் நான் வரவேற்கிறேன். உங்கள் நிதிநுட்பத் தீர்வைகள் மூலம், இந்த மாநிலத்தினை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதற்கு உங்கள் ஆதரவை இந்த நேரத்தில் நான் வேண்டுகிறேன்.
அன்புக்கட்டளை
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து, இந்த ஓராண்டு காலத்தில், எடுத்த முயற்சிகளின் காரணமாக, இதுவரை 192 ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடி. கடந்த ஆண்டு ஈர்த்த முதலீடுகளைவிட, இந்த ஆண்டு இருமடங்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். அதாவது ரூ.1.50 லட்சம் கோடிக்கான முதலீடுகளை ஈர்க்கவேண்டும் என்று ஒரு அன்புக் கட்டளையிட்டேன். தமிழக தொழில்துறை மீதான நம்பிக்கையால்தான் அந்த கட்டளையிட்டேன்.
அதற்கேற்றவாறே, இன்று மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் சேர்த்தால், இதுவரை ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கிறது. இது, கிட்டத்தட்ட 2½ மடங்கு அதிக முதலீடுகள்.
தென் மாவட்டங்களில் 68 சதவீதம் முதலீடுகள்
இன்றைய தினம் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1,25,244 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 74,898 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பல்வேறு மாவட்டங்களில், இந்த நிறுவனங்கள் அமைய இருந்தாலும், 68 சதவீதம் முதலீடுகள் தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன.
21 திட்டங்களுக்கு இன்றைய மாநாட்டில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ரூ.22,252 கோடி முதலீட்டில் இவை தொடங்கப்பட்டுள்ளது. 17,654 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள 21 திட்டங்களில், 20 திட்டங்கள் நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
மிகப்பெரிய மாநாடு
அதுபோலவே, ரூ.1,497 கோடி முதலீடு மற்றும் 7,050 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் 12 திட்டங்கள் இப்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதோடு நம்முடைய கடமை முடிந்து விடுவதாக நாங்கள் இருந்து விடுவது இல்லை. அதனால்தான் ஒப்பந்தங்கள், நிறுவனங்களின் தொடக்க விழாவாக இது மாறிவருகிறது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு மாநாடுகளிலேயே இந்த மாநாடுதான் மிகப்பெரிய மாநாடாக அமைந்துள்ளது. வருங்காலங்களில் இதையும்விட பெரிய முதலீட்டு மாநாடுகளை நடத்த வேண்டும் என்று அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
அடித்தளமாக அமையட்டும்
சமூக நீதி மாநிலமான தமிழ்நாடு, கூட்டாட்சித் தத்துவத்தை முன்னெடுக்கும் தமிழ்நாடு, சகோதரத்துவ மண்ணான இந்த தமிழ்நாடு இந்த வரிசையில் தொழில்துறையில் சிறந்த தமிழ்நாடாகவும் உயர வேண்டும். என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில் என்று கேட்கும் தமிழ்நாடாக இது உயர வேண்டும்.
தொழில்துறையின் வளர்ச்சி என்பது அந்தந்த வட்டாரத்தின் சமூக வளர்ச்சியாக மாறி, தமிழ்நாடு உன்னதத் தமிழ்நாடாக, மேன்மையான தமிழ்நாடாக உயர வேண்டும். தமிழ்நாட்டு அறிவாற்றலை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் தொழில் நிறுவனங்களும் வர வேண்டும். அந்த தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தகுதி படைத்தவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களும் உருவாக வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி முன்னேறுவோம். அதற்கு இத்தகைய முதலீட்டு மாநாடுகள் அடித்தளமாக அமையட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.