அனல் காற்றால் வாடி வதங்கிய மக்கள்... தமிழகத்தில் உக்கிரமாகிறது அக்னி நட்சத்திரம் சென்னையில் 109 டிகிரி வெயில்
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் உக்கிரமடைந்து வருகிறது. சென்னையில் நேற்று 109 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் வாடி வதங்கினர்.;
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதமே கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பித்தது.
தொடக்கத்திலேயே வீறு கொண்டு வெப்பத்தை கக்கிய நிலையில், இதையே தாங்க முடியவில்லையே? மே மாதத்தில் எப்படி தாக்கு பிடிக்க போகிறோமோ? என்றுமக்கள் பேசும் அளவுக்குஅப்போது இருந்தது.
மார்ச் மாதம் 15-ந் தேதியில் இருந்து கோடை மழையும் தமிழ்நாட்டில் பெய்யத்தொடங்கியது. சில இடங்களில் கனமழையும் பதிவானது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதிக்கு பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் காணப்பட்டது.
ஏப்ரல் 22-ந் தேதிக்கு பிறகு மீண்டும் கோடை மழை தயவு காட்டியது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டியது. இது கோடை காலமா? அல்லது மழை காலமா? என்று யோசிக்கும் அளவுக்கு மழை பதிவானதை பார்க்க முடிந்தது. இதனால் கோடை காலத்தில் பதிவாகும் இயல்பான அளவை விட 88 சதவீதம் அதிகமாக இதுவரை மழை பெய்திருக்கிறது.
இந்த தொடர் மழை காரணமாக, கடந்த 4-ந் தேதி முதல் கத்தரி வெயில் தொடங்கினாலும், வெப்பத்தின் தாக்கம் பெருமளவில் தெரியாமலேயே இருந்தது. இதனால் மக்கள் சற்று பெருமூச்சு விட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கத்தரி வெயிலின் கோரத்தாண்டவம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது. அதுவும் கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.
பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கும் முடியாமல், வீடுகளில் இருக்கலாம் என்று நினைத்தால் வெப்பக்காற்றாலும், புழுக்கத்தாலும் தவிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏதோ அனல் அதிகம் நிறைந்த அடுப்புக்கு அருகில் இருந்தால் எப்படி இருக்குமோ? அதே போல் பகல் நேரங்களில் வியர்வை சொட்ட சொட்ட வீடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும், பகல் நேரத்தில்தான் அப்படி என்றால், இரவிலும் வெப்பத்தின் தாக்கம் சற்று இருக்கத்தான் செய்வதாகவும், அதிகாலை 3 மணிக்கு மேல் தான் ஓரளவுக்கு குளிர்ச்சியை உணர முடிவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.
ஏ.சி. இருக்கும் வீடுகளில் கூட வெயிலினால் ஏற்படும் உஷ்ணத்தால், கூடுதலாக மின்விசிறிகளையும் இயக்க வேண்டியிருப்பதாக சொல்கின்றனர். பணியின் நிமித்தமாக வாகனங்களில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் வெயிலின் உக்கிரத்தால் வாடிவதங்கினா். இதனால் சாலையோர குளிர்பான கடைகள், இளநீர், கம்பங்கூழ், மோர், தர்பூசணி உள்பட பழசூஸ் விற்பனை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் வெயில் உக்கிரமாக இருந்தது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 108.86 டிகிரி வெயில் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக வேலூரில் 107.96 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 107.24 டிகிரியும் வெப்பம் பதிவாகி இருந்தது. தமிழ்நாட்டில் நேற்று மொத்தம் 19 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. இதுதவிர புதுச்சேரியில் 106.16 டிகிரியும், காரைக்காலில் 100.94 டிகிரியும் வெயில் பதிவானது.
சென்னையில் நேற்று பதிவான 109 டிகிரி தான் இதுவரை பதிவானதிலே அதிகமானது என்று பேசப்பட்ட நிலையில், இதற்கு முன்பும் இதைவிட அதிகமாக வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு 113 டிகிரியும், 2012-ம் ஆண்டு மே மாதம் 110 டிகிரியும் வெயில் பதிவாகியிருப்பதாகவும், 109 டிகிரியை பொறுத்தவரையில் கடந்த 2008-ம் ஆண்டும், அதற்கு பிறகு கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதியும், 2017-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதியும் பதிவாகியுள்ளதாகவும் ஆய்வு மையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பிறகு, நடப்பாண்டில் கத்தரி வெயில் தொடங்கிய பின்னர், பதிவான அதிகபட்ச வெயில் அளவாக இது பார்க்கப்படுகிறது.
வெயிலின் தாக்கம் இனி வரக்கூடிய நாட்களிலும் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை விட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியமான சூழல் ஏற்படும் என்றும் ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இருப்பினும், மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரை முடிந்தளவுக்கு குடிக்க வேண்டும் என்றும், வெளிர்நிற, இலகுரக பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும் ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
வெளியில் செல்ல அவசியம் இருந்தால் குடை, தொப்பி எடுத்து செல்லவும், கூடுமான வரையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, வடித்த கஞ்சி, எலுமிச்சை தண்ணீர், மோர் போன்றவற்றை குடிக்கவும் அறிவுரை வழங்கியிருக்கின்றனர்.