100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம்
திருவண்ணாமலையில் 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் 100 நாள் வேலை கேட்டு மாநிலம் தழுவிய மனு கொடுக்கும் போராட்டம் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வளாகத்தில் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தில் அரசாணை 52-ன் படி தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு 4 மணி நேர வேலை மற்றும் முழு கூலி வழங்க உறுதிப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளை சரியாக கணக்கெடுத்து அவர்களுக்கு ஆண்டு முழுவருடத்தில் மனித வேலை நாட்களை கணக்கிட வேண்டும்.
ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் வகையில் பணியிடங்கள் குறித்தும், வேலை குறித்தும் வேலை திட்டத்தினை உருவாக்க வேண்டும். சிறப்பு கிராமசபை கூட்டங்களை நடத்தி வேலை திட்டத்தை தீர்மானமாக நிறைவேற்றிட வேண்டும்.
வேலை கேட்டு மனு 6-ம் நம்பர் படிவம் கொடுக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
முடிவில் மாவட்ட பொருளாளர் சத்யா நன்றி கூறினார்.