பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய மக்கள்

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, வெளியூர்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். இதனால் ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.;

Update: 2023-01-14 19:07 GMT

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, வெளியூர்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். இதனால் ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே சொந்த ஊரில், சொந்த பந்தங்களுடன் கொண்டாடுவது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பலர் சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள்.

அவர்கள் பொங்கலை சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு கடந்த 2 நாட்களாக புறப்பட்டு பயணித்தனர்.

நெல்லையில் கூட்டம்

அவர்கள் பெரும்பாலும் ரெயில், பஸ்களில் பயணித்து வந்தனர். அவர்களது வசதிக்காக சிறப்பு ரெயில்களும், பஸ்களும் இயக்கப்பட்டன. நேற்று காலை முதல் வெளியூர்களில் இருந்து வந்த பஸ்கள், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் அவர்கள் நெல்லை சந்திப்பு மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள மிட்டாய் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கியதால், அங்கும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதேபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் வந்து இறங்கிய பயணிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லும் பஸ்களை பிடித்து சென்றதால், அந்த பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர், செங்கோட்டை சென்ற பாசஞ்சர் ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் இன்று காலை வரை வெளியூர் பயணிகள் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு வந்து சேருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்