பஸ்சிற்காக நீண்டநேரம் காத்திருக்கும் மக்கள்
பஸ்சிற்காக நீண்டநேரம் காத்திருக்கும் மக்கள்
பஸ்சிற்காக நீண்டநேரம் மக்கள் காத்திருப்பதால் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். வழித்தடம் மாறி பஸ்கள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பஸ் நிலையங்கள்
தஞ்சை புதிய பஸ் நிலையம் 1995-ம் ஆண்டு தஞ்சையில் 8-வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது கட்டப்பட்டது. இங்கிருந்து மதுரை, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம், மருத்துவக்கல்லூரி, வல்லம், ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, அரியலூர், பாபநாசம், செங்கிப்பட்டி, திருக்கானூர்பட்டி உள்ளிட்ட பல ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பஸ்சிற்காக காத்திருக்கும் நிலை
தஞ்சை பழைய பஸ் நிலையத்திற்கும், புதிய பஸ் நிலையத்திற்கும் இடையே முன்பெல்லாம் குறைந்தபட்சம் 10 நிமிட இடைவெளியில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா காலத்திற்கு பிறகு பஸ்கள் இயக்கப்படும் நிமிடங்களில் இடைவெளி அதிகரித்துவிட்டது. இதனால் பழைய பஸ் நிலையமாக இருந்தாலும் சரி, புதிய பஸ் நிலையமாக இருந்தாலும் சரி பஸ்சிற்காக மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
குறிப்பாக காலை, மாலை நேரத்தில் நகர பஸ்களுக்காக பொதுமக்கள் அதிக அளவில் காத்துக்கிடக்கின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர், கூலி வேலைக்கு செல்வோர், வெளியூர்களுக்கு சென்று விட்டு வருபவர்கள் என ஏராளமானோர் காத்துக்கிடக்கின்றனர். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை பஸ் வந்து நின்றவுடனேயே பொதுமக்கள் ஓடிச்சென்று ஏறும் நிலை உள்ளது.
அவதி
ஆனால் கர்ப்பிணி, வயதானவர்களால் ஓடிச்சென்று ஏற முடியவில்லை. சிலர் ஓடிச்சென்று ஏறும் போது தவறி கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. பஸ்களில் காணப்படும் கூட்டத்தை பார்த்துவிட்டு பலர் அடுத்த பஸ் வரும் வரை பஸ் நிறுத்தங்களிலேயே காத்திருக்க வேண்டிநிலை உள்ளது. பஸ்சிற்காக காத்திருக்கும் கூட்டத்திற்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. தினமும் இதே நிலை நீடிப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதேபோல் தான் பிற பகுதிகளிலும் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கொரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்டதைபோல் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கிராமப்பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள்
இது குறித்து ஏ.ஐ.டி.யூ.சி. அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன் கூறும்போது, தஞ்சை பழைய பஸ் நிலையத்திற்கும், புதிய பஸ் நிலையத்திற்கும் இடையே குறைந்தபட்சம் 10 நிமிட இடைவெளியில் பஸ்கள் இயக்கப்பட்டன. அதிகாலை 4.15 மணி முதல் இரவு 11.30 மணி வரை பஸ்கள் இயக்கப்பட்டன.
கொரோனா காலத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை. கொரோனா பரவல் குறைந்தபிறகு ½ மணிநேரத்திற்கு ஒரு பஸ் வீதம் இயக்கப்பட்டது. இப்போது முன்புபோல் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. புதிய பஸ் நிலையம், மருத்துவக்கல்லூரிக்கு இயக்கப்பட்ட பல பஸ்கள் தற்போது எம்.எல்.ஏ., எம்.பி., உள்ளாட்சி பிரதிநிதிகளின் கோரிக்கை என கிராமப்பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.
வழித்தடம் மாறி இயக்கப்படுவதாக புகார்
இதனால் ஒரு பஸ்சை இரு பகுதிகளுக்கு இயக்க வேண்டியநிலை உள்ளது. அதாவது ஒரு வழித்தடத்தில் இயக்க அனுமதியுள்ள பஸ்சை வழித்தடம் மாற்றி இயக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பஸ்கள் அடிக்கடி வராத காரணத்தினால் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த நேரத்தில் கிராமப்பகுதிகளுக்கு பஸ்களை இயக்கிவிடுகின்றனர். அதிகாரிகளிடம் கேட்டால் நாங்கள் முழுமையாக பஸ்களை இயக்கி வருகிறோம் என்பார்கள். ஆனால் முன்பு இருந்ததை ஒப்பிடும்போது 70 சதவீதம் கூட பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பஸ் நிலையத்திற்குள் மினிபஸ்கள் வந்து மக்களை ஏற்றி செல்கின்றன.
ஒரு வழித்தடத்தில் பஸ்சை இயக்க வேண்டும் என முறைப்படி அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதி பெறாமல் வாய்மொழி உத்தரவாக வழித்தடம் மாற்றி பஸ்களை இயக்குகிறார்கள். நகர பஸ்களை அந்தந்த வழித்தடத்தில் தான் இயக்க வேண்டும். புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்க வேண்டும் என்றால் புதிய பஸ்களை இயக்க வேண்டும். போக்குவரத்துத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, புதிதாக பஸ்களை இயக்க வேண்டும் என்றார்.