இன்று சதுர்த்தி விழா: விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய பொதுமக்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் கடைகளில் அலைமோதியது.

Update: 2022-08-30 20:33 GMT

சேலம், 

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி தினத்தன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவார்கள். அதே போன்று ஒவ்வொரு தெரு பகுதியிலும் அந்தந்த பகுதி மக்கள் சார்பில் பெரிய அளவிலான சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்படும்.

இந்த நிலையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் சேலம் நகரில் அலைமோதினர். சேலம் கடைவீதி, செவ்வாய்பேட்டை, அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அக்ரஹாரம், நெத்திமேடு, அம்மாபேட்டை, வின்சென்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

அமோக விற்பனை

அதன்படி ராஜகணபதி, லிங்க விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டன. குறைந்த பட்சம் ரூ.100 முதல் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பொதுமக்கள் பார்வையிட்டு ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். மேலும் எருக்கம் பூ மாலை, சிறிய அளவிலான அலங்கார குடைகள், அருகம்புல் போன்றவைகளும் விற்பனை செய்யப்பட்டன.

இதே போல விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று பூக்களின் விலை உயர்ந்தன. இருப்பினும் பூக்கள் வாங்க பொதுமக்கள் மார்க்கெட்டில் குவிந்தனர். நேற்று குண்டுமல்லி பூ ஒரு கிலோ ரூ.1,000-க்கும், முல்லை ரூ.600-க்கும் விற்பனை ஆகின. அதே போன்று சாதிமல்லி உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்து இருந்தன. பழங்களின் விலையும் அதிகரித்து இருந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடைகளில் பூஜை பொருட்கள் அமோகமாக விற்பனையாகின.

போக்குவரத்து நெரிசல்

சேலம் முதல் அக்ரஹாரம், கடைவீதி உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் கடும் போக்குவரத்து ெநரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றதை காணமுடிந்தது. போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்