திண்டுக்கல்லில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள்
திண்டுக்கல்லில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
திண்டுக்கல்லில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
ஆயுதபூஜை வழிபாடு
ஆயுதபூஜை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் மக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள். வீடுகளில் விவசாய கருவிகள், பிற வேலைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்து மக்கள் பூஜை செய்வார்கள்.
அதேபோல் கடைகளில் தராசு, எடைக்கற்கள் உள்ளிட்டவற்றை சாமி படத்தின் முன்பு வைத்து வழிபாடுகள் நடக்கும். இதுதவிர 2, 4 சக்கர வாகன பழுதுநீக்கும் ஒர்க் ஷாப்புகள், தனியார் நிறுவனங்களில் அனைத்து வகை எந்திரங்கள், கருவிகளுக்கும் பூஜை செய்வார்கள். இதில் அனைத்து பணியாளர்களும் பங்கேற்பார்கள். அதேபோல் ஆட்டோ நிறுத்தங்களிலும் ஆயுதபூஜை வழிபாடு உற்சாகமாக நடைபெறும்.
பூஜை பொருட்கள்
பொதுவாக ஆயுதபூஜை வழிபாட்டில் முக்கிய இடம் பிடிப்பது அவல், பொரி, கடலை ஆகியவை ஆகும். இதையொட்டி திண்டுக்கல்லில் நாகல்நகர், மெயின்ரோடு, கடைவீதிகள், மேற்கு ரதவீதி, ஏ.எம்.சி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் அவல், பொரி கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்தது. அங்கு ஒரு படி (1 லிட்டர்) பொரி ரூ.10-க்கும், நிலக்கடலை ரூ.100-க்கும், பொரிகடலை ரூ.80-க்கும், அவல் ரூ.80-க்கும் விற்கப்பட்டது.
அதேபோல் நகரின் பல இடங்களில் பழக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஆப்பிள், மாதுளை, கொய்யா, முலாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்பட அனைத்து வகையான பழங்களும் நேற்று விற்பனை செய்யப்பட்டன. இதுதவிர ஆயுதபூஜையில் வாழை கன்றுகள், மாவிலை தோரணம் கட்டப்படும். எனவே விவசாயிகள் கிராமங்களில் இருந்து வாழை கன்றுகள், மாவிலைகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். ஒரு ஜோடி வாழை கன்றுகள் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது.
மக்கள் குவிந்தனர்
ஆயுத பூஜை பொருட்களை வாங்குவதற்கு திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திண்டுக்கல்லில் குவிந்தனர். அவல், பொரி, கடலை, பழங்கள், வாழை கன்றுகள் என பூஜைக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர். இதனால் அனைத்து வகையான பழங்களின் விலையும் கணிசமாக உயர்ந்தது.
அதுமட்டுமின்றி பூஜைக்கு தேவையான பூக்களை வாங்குவதற்கும் மக்கள் அதிக அளவில் வந்தனர். இதனால் திண்டுக்கல் பூ மார்க்கெட் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும் பூ மார்க்கெட் மட்டுமின்றி பல இடங்களில் சாலையோர கடைகள் அமைத்தும் பூக்கள் விற்கப்பட்டன. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 70 டன் பூக்கள் விற்பனை ஆகின. இதனால் விலையும் ஓரளவு உயர்ந்தது.
களைகட்டிய கடைவீதிகள்
இதற்கிடையே மாலையில் ஆயுதபூஜை பொருட்களை வாங்குவதற்கு ஏராளமான மக்கள் நகரில் குவிந்தனர். இதனால் கடைவீதிகளில் ஆயுதபூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியது. நாகல்நகர், மெயின்ரோடு, கடைவீதி, ரதவீதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலான மக்கள் வாகனங்களில் வந்ததால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே பல இடங்களில் போக்குவரத்து போலீசார் இரவு வரை நின்று போக்குவரத்தை சரிசெய்தனர்.