ஆயுதபூஜைக்காக பொருட்கள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர்

ஆயுதபூஜைக்காக பொருட்கள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர். வாழைக்கன்று, தென்னை ஓலை தோரணங்களும் அதிக அளவில் வாங்கிச்சென்றனர். பொரி, அவல், வாழைத்தார், பூசணிக்காய் விற்பனையும் படுஜோராக நடைபெற்றது.;

Update:2023-10-23 00:15 IST

இன்று ஆயுதபூஜை

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்றாக ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வீடுகளில் மட்டுமின்றி தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் தொழிற்சாலை, பஸ் கம்பெனிகள், கல்வி நிறுவனங்களில் அலங்காரங்கள் செய்து, வாழைத் தோரணங்கள் கட்டி சுண்டல், சர்க்கரை பொங்கல், பொரி, அவல், பழங்கள் உள்ளிட்டவை படையலிட்டு வழிபடுவதை பொதுமக்கள் காலம், காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.

அதன்படி இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள், அலுவலகங்களை சுத்தம் செய்து வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளில் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் ஈடுபட்டனர். மேலும் நுழைவு வாயிலில் வாழைமரங்களும் கட்டப்பட்டு தென்னை ஓலை தோரணங்களும் கட்டப்பட்டன.

காய்கறி மார்க்கெட்

தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள காமராஜர் மார்க்கெட், உழவர் சந்தை, திலகர் திடல் காய்கறி மார்க்கெட், கீழவாசல் சரபோஜி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் நேற்று வெள்ளைப்பூசணிக்காய் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அதை ஏராளமான பொதுமக்கள் திருஷ்டி கழிப்பதற்காக வாங்கி சென்றனர். ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.15 முதல் விற்பனை செய்யப்பட்டது. முழு பூசணிக்காய் ரூ.50 முதல் விற்பனை செய்யப்பட்டது.

அதே போல் கீழவாசலில் உள்ள கடைகளிலும், சாலையோரம் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த கடைகளிலும் பொரி, கடலை, அவல் விறபனை மும்முரமாக விற்பனை நடைபெற்றது. குறிப்பாக கீழவாசலில் உள்ள பொரி கடைகளில் தொழிற்சாலைகளில் சாமி கும்பிடுவதற்காக மொத்தமாக பொரி, அவல், கடலைகளை பொதுமக்கள் தங்களுக்கு தேவைக்கு ஏற்ற வகையில் வாங்கிச்சென்றனர். இதனால் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொரி 1 லிட்டர் ரூ.10-க்கும், கடலை 250 கிராம் ரூ.30-க்கும், அவல் 250 கிராம் 20-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வாழைத்தார் விற்பனை

தஞ்சை காமராஜர் காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர்சந்தைகளில் வாழைத்தார் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. திருவையாறு, கந்தர்வக்கோட்டை, திருச்சி காட்டுப்புத்தூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் கொண்டுவரப்பட்டு விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தன. காமராஜர் மார்க்கெட்டில் பூவன் வாழைத்தார் ரூ.150 முதல் ரூ.550 வரை விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தார் கடந்த சில நாட்களாகவே இதே விலையில் தான் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆயுதபூஜைக்காக வாழைத்தார் விற்பனையும் அதிக அளவில் காணப்பட்டது.

அதே போல் பழங்கள் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, கொய்யாப்பழங்கள் விற்பனையும் அதிக அளவில் நடைபெற்றது. மேலும் தேங்காய், வாழைப்பழம், மா இலை, தென்னை ஓலை தோரணம், வாழைக்கன்று, அலங்கார தோரணங்கள் மற்றும் பூஜை பொருட்களின் விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து பழங்கள், பூஜை பொருட்களை வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்