பொருட்கள் வாங்க புதுக்கோட்டை கடைவீதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொருட்களை வாங்க புதுக்கோட்டை கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-10-23 14:21 GMT

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டையில் கடந்த ஒரு வாரமாக கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் இன்று பண்டிகையையொட்டி புதிய ஆடைகள், பட்டாசு, பலகாரங்கள் உள்ளிட்டவை வாங்குவதற்காக நேற்று கீழராஜ வீதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். பண்டிகையையொட்டி சாலையோர கடைகளும், தரைக்கடைகளும் ஏராளமாக அமைக்கப்பட்டிருந்தன. இதில் வியாபாரம் களை கட்டியது.

வெயில் அடித்தது

கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின் போது பலத்த மழை பெய்தது. இதனால் கடைவீதியில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. பொதுமக்களும் அவதி அடைந்தனர். ஆனால் இந்த ஆண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்தது. பண்டிகைக்கு முந்தைய நாளும் மழை பெய்யுமோ? என அச்சத்தில் இருந்தனர்.

ஆனால் நேற்று பகலில் மழை எதுவும் பெய்யவில்லை. வெயில் வழக்கம் போல் அடித்தது. இதனால் பொதுமக்கள், கடை வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் நிம்மதி அடைந்தனர். மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.

வியாபாரிகள் கவலை

ஆலங்குடியில் நேற்று முன்தினம் போதிய வியாபாரம் நடைபெறாததால் வியாபாரிகள் கவலையடைந்தனர். மேலும் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று சற்று வியாபாரம் நடைபெற்றது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ஆலங்குடி மக்கள் பெரும்பாலானோர் தீபாவளிக்கு ஜவுளி, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க புதுக்கோட்டைக்கு சென்றதால் எங்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டது.

மேலும், வட்டிக்கு வாங்கி கொள்முதல் செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்தோம். ஆனால் நேற்று குறைந்தளவு வியாபாரம் நடைபெற்றது என்றனர்.

போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகையையொட்டி பொன்னமராவதி, அண்ணா சாலை, காந்தி சிலை, பஸ் நிலைய வளாகம் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் பட்டாசு, புத்தாடை, இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் அண்ணா சாலையில் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக பொன்னமராவதி போலீசார் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்