கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
ராயபுரம் ஸ்டேட்பாங்க் காலனி கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி;
திருப்பூர்
திருப்பூர் ராயபுரம் ஸ்டேட் பாங்க் காலனி 3-வது வீதி சமாதானபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
கால்வாய் அடைப்பு
திருப்பூர் ராயபுரம் ஸ்டேட் பாங்க் காலனி 3-வது வீதி சமாதானபுரம் பகுதியில் விநாயகர் கோவில் அருகேயுள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் காலேஜ் ரோடு பகுதியில் தொடங்கி ராயபுரம் வழியாக ெநாய்யல் ஆற்றில் கலக்கிறது. காலேஜ் ரோடு பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கழிவுநீர் கால்வாய் வழியாக வந்து சமாதானபுரம் பகுதியில் அடைத்து கொள்கிறது.
அதுமட்டுமல்லாமல் கால்வாய் முறையாக துர்வாரப்படாததால் சில இடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதியில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பொதுமக்கள் அவதி
அதுபோல் இப்பகுதியில் கால்வாய் அருகே பொதுமக்கள் குப்பைகளை சாலையில் கொட்டி செல்கின்றனர். இந்த குப்பைகள் காற்றில் பறந்து கால்வாயில் விழுந்து மேலும் அடைப்பை ஏற்படுத்துகிறது. கால்வாயில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
எனவே மாநகராட்சி நிர்வாகம் இதனை கருத்தில்கொண்டு கால்வாய் அடைப்பை சரிசெய்து கழிவுநீர் சீராக செல்லவும், அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.