விழுப்புரம் மாவட்டத்தில்மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்மேற்பார்வை பொறியாளர் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சிவகுரு அறிவுரை வழங்கியுள்ளார்.

Update: 2023-07-09 18:45 GMT

இதுகுறித்து சிவகுரு வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின் விபத்துகளை தவிர்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு அனைத்துப்பிரிவு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள உயரழுத்த, தாழ்வழுத்த மின் பாதைகளை களஆய்வு செய்து குறைகள் கண்டறியப்பட்டு அவை நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள், விழிப்புணர்வுடன் செயல்பட்டு மின் விபத்துகளையும், அதன் மூலம் ஏற்படும் உயிர் சேதங்களையும் தவிர்க்குமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

விவசாயிகள், தங்கள் நிலத்தில் உள்ள பயிர்களை காப்பாற்ற மின்வேலி அமைப்பதால் பொதுமக்கள் அதில் சிக்கி உயிரிழந்து விடுகின்றனர். எனவே விவசாய நிலத்தில் மின்வேலி அமைக்க வேண்டாம். மின்வேலி அமைப்பது கிரிமினல் குற்றமாகும். மீறினால் இந்திய தண்டனை சட்ட மின்சாரப்பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மின் பாதையில் மின் கம்பி அறுந்து கிடந்தால் பொதுமக்கள் யாரும் அதனை தொடாமல் மற்றும் அருகில் செல்லாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தாலோ, சாய்ந்த நிலையில் மின் கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ பொதுமக்கள் அதனை தொடாமல் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அறிவுரைகள்

பொதுமக்கள், மின் பாதைக்கு அருகில் வீடு, கட்டிடம் கட்டும்போது மின்பாதையில் இருந்து போதிய இடைவெளிவிட்டு கட்ட வேண்டும். மின் பாதையின் அருகில் செல்லாமலும், மின் பாதையை தொடாமலும் மிகவும் கவனமாக கட்டுமான பணியை மேற்கொள்ள வேண்டும். டிராக்டர், லாரியில் கரும்பு போன்றவற்றை அளவுக்கதிகமாக ஏற்றிச்செல்லும்போது மின் கம்பிகளை உரசாமல் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். பொதுமக்கள், தங்கள் வீடு, கடைகளில் வயரிங் செய்யும்போது தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட வயரிங் சாமான்களை உபயோகித்தும், முறையான நில இணைப்பு கொடுத்தும் வயரிங் செய்தல் வேண்டும். பழுதான மின் உபகரணங்களை உடனடியாக மாற்றியமைத்து விபத்தை தவிர்த்தல் வேண்டும். ஆடு, மாடு போன்றவற்றை மின் கம்பத்திலோ, இழுவை கம்பியிலோ கட்டக்கூடாது.

பழுதடைந்த மின் கம்பம், அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் பற்றிய தகவலை தெரிவிக்க தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட மின்னகம் எண்ணான 94987 94987 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். மண்டல அளவில் உள்ள வாட்ஸ்-அப் எண் 94458 55768 மூலமும் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்