பல்லடத்தில், அரசு நிலத்தை மீட்க கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
பல்லடத்தில், அரசு நிலத்தை மீட்க கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.;
பல்லடம்
பல்லடம் வடுகபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அரசு நிலத்தை மீட்க கோரி பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இல்லாததால் துணை தாசில்தார் இடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், பல்லடம் வடுகபாளையம் பஜனை கோவிலின் தென்புறம் உள்ள காலியிடம் அரசு புறம்போக்கு நிலம் என ஆவணங்களில் உள்ளது. அந்த இடத்தை பாலசுப்பிரமணியம் என்பவர் ஆக்கிரமித்து தனியார் பள்ளி நடத்துவதாக கூறி வருகிறார். ஆனால் அங்கு பள்ளி வகுப்புகள் எதுவும் நடைபெறுவதில்லை. காதணி விழா போன்ற விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேற்படி இடத்திற்கு பாலசுப்பிரமணியம் அவரது மனைவி பெயரில் பட்டா பெற முயற்சிப்பதாக தெரிய வருகிறது. அந்த இடத்தில் அரசு நூலகம் கட்ட நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளோம். எனவே மேற்படி இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியாரிடமிருந்து மீட்டு நூலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.