தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஜனவரி 1ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. இந்த சூழலில் அரையாண்டு மற்றும் தொடர் விடுமுறை இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதன்படி நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவகங்கள் வழக்கம்போல் செயல்பட உள்ளன.
இந்த சூழலில் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், விடுமுறை முடிந்து தற்போது சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் விடுமுறை முடிந்து சென்னை திரும்பி வருவது காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்படி செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் நிலவுகிறது.
தொடர்ந்து மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கத்திகும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பி வருவதால் கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல புத்தாண்டை கொண்டாட மெரினா கடற்கரைக்கு பலரும் குவிந்ததால், காமராஜர் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகின்றன.