28 குடும்பத்தினர் உள்ள நிலையில் 20 வீடுகளை மட்டும் ஒதுக்கீடு செய்ததால் பொதுமக்கள் குடியேற மறுப்பு

28 குடும்பத்தினர் உள்ள நிலையில் 20 வீடுகளை மட்டும் ஒதுக்கீடு செய்ததால் பொதுமக்கள் குடியேற மறுப்பு தெரிவித்தனர்.;

Update: 2023-08-23 04:36 GMT

கூடுவாஞ்சேரி,

செங்கல்பட்டு மாவட்டம் காயரம்பேடு கிராமத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் இருளர்களுக்கு 64 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதில் காயரம்பேடு கிராமத்தில் வசிக்கும் 28 இருளர் குடும்பங்களுக்கு வீடு வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் 20 குடும்பங்களுக்கு மட்டுமே அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

8 குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கவில்லை, இதனால் வீடு ஒதுக்கீடு பெற்ற இருளர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசு ஒதுக்கீட்டில் குடியேறுவதற்கு மறுத்துவிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு தாசில்தார் தனலட்சுமி காயரம்பேடு கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீடு ஒதுக்கீடு பெற்று குடிவராமல் உள்ள இருளர் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர்கள் நாங்கள் காயரம்பேட்டில் 28 இருளர் குடும்பங்கள் உள்ளோம். அவர்களில் 20 குடும்பத்தினருக்கு மட்டும் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள 8 குடும்பத்தினருக்கும் உடனடியாக வீடு ஒதுக்கினால் நாங்கள் அரசு ஒதுக்கீடு செய்த வீட்டில் குடியேறி வசிப்போம் என்று தெரிவித்தனர்.

இதற்கு தாசில்தார் விடுபட்ட 8 குடும்பத்தினருக்கும் இதே அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்வதற்கு சம்பந்தப்பட்ட துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பேசி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது அவருடன் காயரம்பேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருவாக்கு உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்