பஞ்சாயத்து தலைவர் கைதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ராஜபாளையம் அருகே பஞ்சாயத்து தலைவர் கைதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே பஞ்சாயத்து தலைவர் கைதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் காளிமுத்து. இவர் அதே பகுதியை சேர்ந்த பொன் பாபா பாண்டியன் என்பவரிடம் கட்டிட வரைபடத்திற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் பழிவாங்கும் நோக்கோடு திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கீழ ராஜகுலராமன் போலீஸ் நிலையம் எதிரே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆலங்குளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரெங்கநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜாமணி உள்ளிட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். திட்டமிட்டு பஞ்சாயத்து தலைவரை லஞ்ச வழக்கில் சிக்க வைத்ததாகவும், பழிவாங்கும் நோக்கில் இந்த செயல் நடந்ததாகவும் கூறி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஊராட்சி செயலரை இடம் மாற்ற வேண்டும். லஞ்சம் கொடுத்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர். இன்னும் ஒரு வாரத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.