சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கொழுமம் வனசரகத்தில் குதிரையாறு அணை அமைந்துள்ளது. இந்தநிலையில் இந்த அணைப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று உலா வந்தது.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கொழுமம் வனசரகத்தில் குதிரையாறு அணை அமைந்துள்ளது. இந்தநிலையில் இந்த அணைப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று உலா வந்தது. அந்த பகுதியில் திரிந்த நாயை சிறுத்தை கடித்தது. நாய் சத்தமிடுவதை கேட்டு அங்கு ஆடு மேய்ப்பவர்கள் ஓடி வந்தனர். சிறுத்தையை விரட்டுவதற்கு அவர்கள் கூச்சலிட்டனர். உடனே நாயை விட்டு விட்டு அங்கிருந்து வனப்பகுதிக்குள் சிறுத்தை தப்பி ஓடியது. இந்த காட்சியை ஆடு மேய்ப்பவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். அந்த வீடியோ வலைத்தளத்தில் பரவி வைரலானது.
இதுகுறித்து தகவலறிந்த அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த பகுதியில் முகாமிட்டு சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று கிராம மக்களை வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர். குதிரையாறு அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.