நவீன அரிசி ஆலை நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்
மயிலாடுதுறையில் நவீன அரிசி ஆலை நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
மயிலாடுதுறையில் நவீன அரிசி ஆலை நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
மயிலாடுதுறை சித்தர்க்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை நிர்வாகம் ஐகோர்ட்டில் அளித்த உறுதி மொழியை மீறி சுற்றுச்சூழல் சீர்கேட்டில் ஈடுபடுவதாக கூறி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு கிராம பிரமுகர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல், ஒன்றியக் குழு உறுப்பினர் பாரதிமதியழகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமணி தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல்கள் பாலாஜி, கணபதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கரித்துகள்கள்
நவீன அரிசி ஆலை நிர்வாகம் ஐகோர்ட்டில் அளித்த உறுதிமொழிக்கு எதிராக, புழுங்கல் அரிசியை அரைக்க நாள் ஒன்றுக்கு 5 டன் உமியை எரித்து வருவதால் காற்றில் கரித்துகள்கள் பரவி மனிதர்களுக்குசுவாசக் கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட நோய் ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் நவீன அரிசி ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பேச்சுவார்த்தை
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் கிராம மக்கள், போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் கிராம முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் அப்பகுதியில் சாலை மற்றும் வீடுகளில் படிந்துள்ள கறித்துகள்களை சேகரித்து தட்டுகளில் கொட்டி வைத்து பொதுமக்கள் பார்வைக்காக வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.