கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நேற்று மனு கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.;
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. மேலும் கடந்த வாரம் திங்கட்கிழமை அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. எனவே நேற்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க குவிந்துவிட்டனர்.
இதனால் மனு பதிவு செய்யும் இடத்தில் நீண்ட வரிசை காணப்பட்டது. இதில் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 647 பேர் மனு கொடுத்தனர். அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் இல்லம்தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் 34 பேருக்கு பாராட்டு சான்றிதழ், கருணை அடிப்படையில் பெண்ணுக்கு நியமன ஆணை, மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இலவச இஸ்திரி பெட்டி, ஊன்றுகோல் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
பஸ் வசதி
இதற்கிடையே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி ஊராட்சி வலசு கிராமத்தில் 650 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கிருந்து தினமும் 60 மாணவர்கள் 7 கி.மீ. தூரம் நடந்து செங்குறிச்சி மேல்நிலைப்பள்ளிக்கு செல்கின்றனர். எனவே வலசு கிராமத்துக்கு அரசு பஸ் இயக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
குஜிலியம்பாறை தாலுகா பாம்புலுபட்டி, குள்ளம்பட்டி, ஆட்டுக்காரன்பட்டி, சின்னகோனம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், கூம்பூர் கிராமம் பாம்புலுபட்டியில் அச்சுவண்டை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அந்த நிலத்தை மீட்டு தரவேண்டும், என்று கூறியிருந்தனர்.
முதிர்வு தொகை
திண்டுக்கல்லை அடுத்த அணைப்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் கொடுத்த மனுவில், கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்திய பொதுஇடத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி பொதுஇடத்தை மீட்டு தரவேண்டும், என்று கூறியிருந்தனர்.
ஏ.வெள்ளோட்டை அடுத்த கரட்டழகன்பட்டியை சேர்ந்த பாப்புராஜ் கொடுத்த மனுவில், எனக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். எனவே இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் அவர்களை சேர்த்து இருந்தேன். அந்த திட்டத்தில் முதிர்வு காலம் முடிந்து ஓராண்டு ஆகியும் எனது மகளுக்கு பணம் கிடைக்கவில்லை. எனவே முதிர்வு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
மேம்பாலத்தில் ஆணிகள்
திண்டுக்கல்லை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் கொடுத்த மனுவில், திண்டுக்கல் புறவழிச்சாலையில் கரூர் சாலை, பழனி சாலை, வத்தலக்குண்டு சாலை ஆகிய பிரிவுகளில் உள்ள மேம்பாலங்களில் ஆணிகளை அடித்து டிஜிட்டல் பேனர்கள் மாட்டப்படுகின்றன. இது மேம்பாலங்களின் உறுதியை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே மேம்பாலத்தில் ஆணி அடித்து பேனர் மாட்டுவதை தடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
நிலக்கோட்டை தாலுகா எத்திலோடு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 7 பேர் கொடுத்த மனுவில், எத்திலோடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மேலும் வார்டு உறுப்பினர்களுக்கும் எந்தவித தகவலும் தெரிவிப்பதில்லை. இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
ரூ.50 லட்சம் நிவாரணம்
தமிழ்நாடு வண்ணார் எழுச்சி நலப்பேரவையினர் கொடுத்த மனுவில், நிலக்கோட்டை தாலுகா பச்சை மலையான்கோட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம். பூ மாலை கட்டும் தொழிலாளி. கடந்த மாதம் மகாலிங்கத்தை, 6 பேர் கொலை செய்துவிட்டனர். இதுதொடர்பாக 6 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவருடைய குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம், மகாலிங்கத்தின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.