மயிலாடுதுறை கடைவீதியில் பூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
ஆயுத பூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை கடைவீதியில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.;
ஆயுத பூஜை
நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான 9-வது நாளன்று ஆயுத பூஜை எனும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களை வணங்கும் நாளாக இந்த ஆயுத பூஜை இருந்து வருகிறது. மேலும் நமது அறிவுத்தளத்தை மேம்படுத்தும் வகையில் புத்தகங்களை வைத்தும் வழிபட்டு வருகிறோம்.
இந்த பண்டிகையின் வழிபாட்டில் முக்கிய பொருட்களாக பொரி, சுண்டல், பழங்கள், இனிப்பு வகைகள், காய்கறிகள் என பலவகை உணவு பொருட்களை வைத்து படையல் இடுவது வழக்கம்.
விழாக்கோலம்
மேலும் தொழில் நிறுவனங்களிலும், வாகனங்களிலும் தோரணங்கள், வாழைக்கன்றுகளை கட்டி கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக மயிலாடுதுறை நகரில் நேற்று பொதுமக்கள் ஆயுதபூஜை கொண்டாடுவதற்காக ஆர்வத்துடன் வந்து பொருட்களை வாங்கி சென்றனர். குறிப்பாக காந்திஜி சாலை, பட்டமங்கலத்தெரு, மகாதானத்தெரு, பெரியகடை தெரு, திரு.வி.க. மார்க்கெட் பகுதிகளில் உள்ள பூக்கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகள், பொரி கடைகளில் மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி சென்றனர்.
ஆங்காங்கே வாழைக்கன்றுகளும், தோரணங்களும் தெருக்களில் கடை விரிக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் பெரும்பாலானோர் தோரணங்களையும், வாழைக்கன்றுகளையும் வாங்கி சென்றனர். இதனால் மயிலாடுதுறை நகரம் நேற்று களைகட்டி விழாக்கோலம் பூண்டிருந்தது.