கோரையாறு தென்கரையில் தார்ச்சாலை அமைக்கப்படுமா?
கண்ணம்பாடி- தண்டாலம் பாலம் இடையே கோரையாறு தென்கரையில் தார்ச்சாலை அமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.;
கண்ணம்பாடி- தண்டாலம் பாலம் இடையே கோரையாறு தென்கரையில் தார்ச்சாலை அமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கோரையாறு தென்கரை சாலை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கண்ணம்பாடியில் இருந்து தண்டாலம் பாலம் வரை கோரையாறு தென்கரையில் சாலை உள்ளது. இந்த சாலை முழுவதும் கப்பி கற்கள் பெயர்ந்து கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது.
4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலை காரிச்சாங்குடி, மடப்புரம், சமுதாயக்கரை, மேலாளவந்தச்சேரி, கீழாளவந்தச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு போக்குவரத்துக்கு பயன்பட்டு வருகிறது. இந்த சாலை வழியாகத்தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மன்னார்குடி, நீடாமங்கலம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல நகரங்களுக்கு சென்று படித்து வருகின்றனர்.
பணிகள் நடைபெறவில்லை
அதுமட்டுமின்றி தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், வங்கிகளுக்கு செல்வதற்கும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும் இந்த சாலை வழியாக செல்ல வேண்டி உள்ளது. தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்வது சிரமமாக உள்ளதாகவும், சாலை முழுவதும் சிதறி கிடக்கும் கப்பி கற்கள் காலில் குத்தி காயம் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், 'கோரையாறு தென்கரை சாலை வழியாக ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல முடியாது. சாலையை சீரமைக்கக்கோரி 3 முறை சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. நீடாமங்கலம் தாசில்தார் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி உடனே இங்கு தார்ச்சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்படி பணிகள் நடைபெறவில்லை. இங்கு புதிதாக தார்ச்சாலை அமைப்பதற்கான பணியை அதிகாரிகள் உடனடியாக தொடங்க வேண்டும்' என்றனர்.