வீட்டுவரி ரசீது தராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

வாணியம்பாடி அருகே வீட்டு வரி ரசீது தராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-08-07 09:54 GMT

வாணியம்பாடி,

வாணியம்பாடி அருகே வீட்டு வரி ரசீது தராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர எல்லை கிராமம்

வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் நாராயணபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 3 தலைமுறையாக வசித்து வருகின்றனர்.

இந்த கிராம மக்களுக்கு குடும்ப அட்டை மற்றும் மின் இணைப்பு ஆகியவை தமிழக அரசு வழங்கி உள்ளது. இவர்கள் கடந்த 6 மாத காலமாக வீட்டு வரியை ஆன்லைனில் செலுத்தி வந்தனர். ஆனால் அவர்களுக்கு ரசீது வழங்கப்படவில்லை.

தற்போது கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் படிவம் இப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சாலை மறியல்

கலைஞர் மகளிர் உரிமை தொகையை பெற வீட்டு வரி ரசீது முக்கியமாக உள்ளத. ஆனால் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் ஆன்லைனில் வீட்டு வரியை செலுத்தியதற்கான ரசீதை தர மறுப்பதாக குற்றம்சாட்டி அவ்வழியாக வாணியம்பாடி நோக்கி சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி தாசில்தார் சாந்தி, நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கலீம் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அதனை ஏற்க மறுப்பு தெரிவித்த மக்கள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ரோட்டில் வழி விடுவதாக கூறிவிட்டு, அங்கிருந்து சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாசில்தார் உறுதி

தமிழக ஆந்திர எல்லையில் உள்ள நாராயணபுரம் கிராமத்தை ஒட்டி உள்ள இந்த மக்கள் வசிக்கும் பகுதி ஆந்திர மாநிலத்திற்கு சொந்தமானது. இருப்பினும் தலைமுறை தலைமுறையாக இவர்கள் இதே பகுதியில் குடியிருப்பதால் இவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளிட்ட அனைத்தும் தமிழக அரசால் செய்து தரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்ததன்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்