குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

செங்குட்டைப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-07-10 19:30 GMT

நெகமம்

செங்குட்டைப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர் வரவில்லை

கிணத்துக்கடவு அருகே உள்ள செங்குட்டைப்பாளையத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக வீட்டு இணைப்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பொது இணைப்பில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. அதுவும் குறைந்த நேரமே வினியோகிக்கப்படுவதாக தெரிகிறது.

சாலை மறியல்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் செங்குட்டைப்பாளையம் பிரிவு அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பரபரப்பு நிலவியது.

இதை அறிந்த நெகமம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சிக்கந்தர்பாட்சா மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

நடவடிக்கை

அப்போது சீராக குடிநீர் வழங்குவதோடு கள்ளிமேடு பகுதியில் பொதுக்கழிப்பிடம், சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பின்னர் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், பொது கழிப்பிடம் மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பிறகு மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்