பெண்ணாடம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பெண்ணாடம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2022-06-30 16:17 GMT

பெண்ணாடம், 

பெண்ணாடம் அடுத்த மாளிகை கோட்டம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 18 பேருக்கு அதே பகுதியில் தலா 2½ சென்ட் வீட்டுமனைக்கான பட்டா கடந்த 2008-ம் ஆண்டு அரசால் வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு அந்த இடத்தை அதிகாரிகள் காண்பிக்கவில்லை என தெரிகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலர், அந்த இடத்தில் கரும்பு, நெற்பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இலவச மனைப்பட்டா வழங்கிய இடத்தில் வருவாய்த்துறை சார்பில் அளவீடு செய்து கல் நடப்பட்டது.

ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், வயல்களில் உள்ள நெல், கரும்பு பயிர்களை அகற்றினர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு மாதத்திற்குள், ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றப்படும் என வருவாய்த்துறையினர் உத்தரவாதம் அளித்து இருந்தனர்.

சாலை மறியல்

ஆனால் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என தெரிகிறது. இதை கண்டித்தும், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி தரக்கோரியும் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் மாளிகை கோட்டத்தில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும், விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின், திட்டக்குடி சமூக நல பாதுகாப்பு தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தாசில்தார் கார்த்தி முன்னிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

மாற்று இடம்

தொடர்ந்து அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட இடத்தில் 2 பிரிவினர்கள் இருப்பதால் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை ஏற்படும். எனவே பட்டா வழங்கப்பட்டுள்ள உங்களுக்கு மாற்று இடம் வழங்க அரசு சார்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்