வீட்டு மனை பட்டா வழங்க கோரி வருவாய் அலுவலர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
வீட்டு மனை பட்டா வழங்க கோரி அமணம்பாக்கம் வருவாய் அலுவலர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;
மாகரல், குமக்கம்பேடு-இந்திரா நகர், அம்மணம்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் வசிக்கும் மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை உட்பிரிவு செய்து கிராம கணக்குகளில் பதிவு செய்யக்கோரியும், வகை மாற்றம் செய்யப்பட்ட பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்யக் கோரியும் நேற்று திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அமணம்பாக்கம் வருவாய் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் வட்ட செயலாளர் பழனி தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஜி.கண்ணன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் தாசில்தார் மதியழகன், வருவாய் அலுவலர் சரவணன், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சந்திரதாசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் 200 மனுக்கள் புதியதாக பட்டா வழங்க கோரியும், 100 மனுக்கள் வகை மாற்றம் செய்து கணினியில் பதிவேற்றம் செய்ய கோரியும் வழங்கப்பட்டது. இதில், நத்தம் பகுதியில் இருப்பவருக்கு 15 நாட்களுக்குள்ளும், தோப்பு-பாட்டை பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு மாதத்திலும், மேய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருப்பவர்களுக்கு மாவட்ட கலெக்டரிடம் பேசி விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதிஅளித்தார். இதனை ஏற்று அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.