குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பணகுடியில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.;

Update: 2023-07-26 19:25 GMT

பணகுடி:

பணகுடியில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

பணகுடி பேரூராட்சியை சேர்ந்த 1, 4, 7-வது வார்டு பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் குடிநீர் சீராக வழங்க வலியுறுத்தி அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று பணகுடி பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு காலிக்குடங்களுடன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்த போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

பேச்சவார்த்தை

தகவல் அறிந்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடனடியாக குடிநீர் சீராக வழங்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்