சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;

Update: 2023-04-21 18:45 GMT

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் ஒன்றியம் பாசார் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 4 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பொருத்தப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீர், தாழ்வான பகுதிகளுக்கு மட்டுமே செல்கிறது. மேடான பகுதிகளான 2-வது வார்டு மற்றும் எம்.தாங்கலுக்கு குடிநீர் செல்லவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட பொது கிணறு அமைக்கும் பணிகளும் பாதியிலேயே நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அ.தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வி ராஜா கண்ணு தலைமையில், பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும், கூடுதல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்ட பொது கிணற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.இதுபற்றி தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் இதுகுறித்து கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்