ஆதார் எண்ணை இணைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டாத நிலை
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது.;
சிவகாசி,
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது.
ஆதார் எண் இணைப்பு
மத்திய அரசு வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இதற்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் கூடுதல் கவனம் செலுத்த சம்பந்தப்பட்ட வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் அனைத்து நகர பகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிராமப்பகுதி மக்கள் இதில் சற்று ஆர்வம் குறைவாகவே உள்ளனர். சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 60 சதவீதம் பேர் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வரவேற்பு இல்லை
பல கிராமங்களில் 30 சதவீதம் வாக்காளர்களே தங்களது வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தெரிகிறது. வாக்குசாவடி நிலை அலுவலர்கள் இந்த பணியை வீடு, வீடாக சென்று செய்தாலும் பலர் தங்களது வீடுகளில் இல்லாத நிலை நீடிக்கிறது.
பணிக்கு செல்லும் பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவர்களுக்காக சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நிரந்தர முகாம் அமைக்கப்பட்டும் போதிய வரவேற்பு இல்லாத நிலை நீடிக்கிறது. எனவே வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்று சிவகாசி தாசில்தார் லோகநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை 100 சதவீதம் முடித்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 2 பேரை சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார்.