சாலையில் சிதறிக்கிடந்த ஊசிகளால் பொதுமக்கள் அச்சம்

புதுக்கோட்டையில் சாலையில் சிதறிக்கிடந்த ஊசிகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.

Update: 2022-12-01 19:31 GMT

சாலையில் சிதறிக்கிடந்த ஊசிகள்

புதுக்கோட்டை நிஜாம் காலனி பிரதான சாலையில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் வீடுகளில் இருந்து கொண்டுவரும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அடிக்கடி ஊசி, சிரிஞ்சு மற்றும் டெஸ்ட் டியூப்கள் சாலையில் கொட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சியில் புகார் செய்யும்போது அப்போதைக்கு நகராட்சி அதிகாரிகள் வந்து அதை அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்றும் காலையில் அதே போல் ஊசி, சிரிஞ்சு, ரத்தபரிசோதனை செய்யும் டெஸ்ட்டியூப் போன்றவை பிளாஸ்டிக் பையில் போட்டு ரோட்டில் அடையாளம் தெரியாதவர்கள் வீசி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்கள் பையில் இருந்த ரத்தவாடையை கொண்டு பையை இழுத்து சென்றதால் ரோடு முழுவதும் ஊசிகள் சிதறிகிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சியின் துப்பரவு பணியாளர்கள் வந்து அதை அகற்றினர்.

போதை பழக்கம்

இந்த பகுதியின் அருகில் மருத்துவமனையோ அல்லது ரத்தபரிசோதனை நிலையமோ இல்லாத நிலையில் எங்கிருந்து இங்கு வந்து கொட்டுகின்றனர் என்று யாருக்கும் தெரியவில்லை. இதுபோல் ஊசிகளை கொட்டிவிட்டு செல்வதால் அங்கு மேயவரும் மாடுகள் வாயில் ஊசிகள் குத்தி வாயில் ரத்தம் வரும் நிலையில் காணப்படுவதாகவும், உண்மையில் இது மருத்துவ பரிசோதனைக்கு கொண்டுவந்து கொட்டப்படும் ஊசிகள் தானா அல்லது போதை பழக்கம் கொண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் இங்கு வந்து கொட்டி செல்கின்றனரா? என்று தெரியவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் தெரிவித்தனர். இது மீண்டும் தொடராமல் இருக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது பெரிய அசம்பாவிதம் நடந்தால் தான் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்