திருப்பூரில் போராட்டம் நடத்த மக்கள் திரண்டதால் பரபரப்பு

சமூக வலைதளங்களில் வடமாநிலத்தவர்கள் தொடர்பான வீடியோ வைரலாக பரவியதன் எதிரொலியாக திருப்பூரில் போராட்டம் நடத்துவதற்கு மக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-27 17:37 GMT

சமூக வலைதளங்களில் வடமாநிலத்தவர்கள் தொடர்பான வீடியோ வைரலாக பரவியதன் எதிரொலியாக திருப்பூரில் போராட்டம் நடத்துவதற்கு மக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையொட்டி போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

சமூக வலைதளங்களில் வைரல்

திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் கும்பலாக 4 வாலிபர்களை ஓட, ஓட துரத்தி சென்று தாக்குவது போன்ற வீடியோ ஒன்று வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் முதல் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் ஒரு சிலர் பெல்ட், கல், மரக்கிளைகளுடன் ஆக்ரோஷமாக ஓடி வருவது போன்ற காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த 14-ந்தேதி ஒரு பேக்கரியில் திருப்பூர் இளைஞர்களுக்கும், வடமாநில வாலிபர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக அனுப்பர்பாளையம் திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தின் முன்பு வடமாநில தொழிலாளர்கள் அந்த இளைஞர்களை துரத்தி சென்றதும், அந்த சம்பவம் தொடர்பான வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதும் தெரியவந்தது.

போராட்டத்திற்கு திரண்டனர்

இந்த நிலையில் வடமாநிலத்தவர்களின் செயலை கண்டித்து பொதுமக்களும், ஒரு சில அமைப்பினரும் அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பு அருகே நேற்று காலை திடீரென போராட்டம் நடத்துவதற்காக திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மாநகர வடக்கு துணை போலீஸ் கமிஷனர் அபிஷேக் குப்தா, கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் அந்த வழியாக வந்த திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார்மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் போராட்டம் நடத்த வந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக அனைத்துக்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு குழு அமைப்பது என்றும், அதன் மூலமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆலோசனை

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் பின்பு மேயர் ந.தினேஷ்குமார் இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கான நடவடிக்கை தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக பிரச்சினைக்குரிய சம்பவம் நடைபெற்ற பனியன் நிறுவனம் முன்பு அனுப்பர்பாளையம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நல்லசிவம் தலைமையில், இன்ஸ்பெக்டர் பதுருன்னிசா பேகம் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். அங்கு வெளியாட்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு ஒரு பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் சென்று, வன்முறையில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களை கண்டித்து மனு அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்