ஓய்வூதியர்கள் கையெழுத்து இயக்கம்

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஓய்வூதியர்கள் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.;

Update: 2023-10-15 19:04 GMT

தேர்தல் கால வாக்குறுதிகளை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கினர். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த இந்த கையெழுத்து இயக்கத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். 70 வயது முதிர்வுற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீட்டை முறையாக, குறைபாடுகள் இன்றி அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்-அமைச்சரை வலியுறுத்தி கையெழுத்திட்டனர். மேலும் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதிக்குள் தமிழகம் முழுவதும் 1 லட்சம் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்களிடம் கையெழுத்தினை பெற்று சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மூலம் முதல்-அமைச்சரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது, என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் மேற்கண்ட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற டிசம்பர் மாதம் 12-ந்தேதி காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் தங்களது கண்ணில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்