ஓய்வூதியதாரர்கள் ஆயுள்சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்

தொழிலாளர் நல வாரியங்களில் ஓய்வூதியதாரர்கள் ஆயுள்சான்றை பதிவேற்றம் ெசய்ய வேண்டும் என தொழிலாளர் நல உதவிஆணையர் காளிதாஸ் (சமூக பாதுகாப்பு திட்டம்) கேட்டுக் கொண்டுள்ளார்.;

Update:2023-06-17 02:16 IST


தொழிலாளர் நல வாரியங்களில் ஓய்வூதியதாரர்கள் ஆயுள்சான்றை பதிவேற்றம் ெசய்ய வேண்டும் என தொழிலாளர் நல உதவிஆணையர் காளிதாஸ் (சமூக பாதுகாப்பு திட்டம்) கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆயுள் சான்று

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம் முதலான 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் 60 வயது முடிவடைந்த உறுப்பினர்களுக்கு விருதுநகர் தொழிலாளர் நல உதவி ஆணைய (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணைய (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்திற்கு வருகை தந்து ஆயுள்சான்று சமர்ப்பிக்கின்றனர்.

தற்போது ஓய்வூதியர்களின் சிரமத்தினை தவிர்க்கும் பொருட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் இணையதளத்தில் ஓய்வூதியர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கலாம்

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் முதலான 18 அமைப்பு சாரா நல வாரியங்களில் விருதுநகர் தொழிலாளர் உதவிஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தின் மூலம் ஏற்கனவே மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள், ஆதார் எண், குடும்ப அட்டை, ஓய்வூதிய ஒப்படைப்பு கணக்குஎண் மற்றும் நேரடி புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். தொழிலாளர் நல வாரிய பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஓய்வூதிய ஆணை இல்லாதவர்கள் இணையதளம் முகவரியில் ஓய்வூதியதாரரின் ஓய்வூதிய விண்ணப்ப எண் மற்றும் தொழிலாளர் நல வாரிய பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஓய்வூதிய ஆணையினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப எண்

ஓய்வூதிய விண்ணப்ப எண் தெரியாத ஓய்வூதியதாரர்கள் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய இணையதளத்தின் முகப்பில் இருக்கும் விண்ணப்பத்தின் எண்கள் அறிய என்ற வசதியை பயன்படுத்தி பதிவு செய்த தொலைபேசி எண் உள்ளீடு செய்தும் அல்லது பயனாளியின் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்தும் ஓய்வூதிய விண்ணப்ப எண்ணை அறிந்து கொள்ளலாம்.

ஆயுள் சான்று அளித்த ஓய்வூதியர்களுக்கு மட்டுமே தொடர்ந்து ஓய்வூதியம் அனுமதிக்கப்படும் என்பதால் இதுவரை ஆயுள்சான்று சமர்ப்பிக்காத 790 ஓய்வூதியதாரர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் இணையதளம் வழியாக ஆயுள் சான்றினை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்படி ஓய்வூதியதாரிடமிருந்து ஆயுள் சான்றை அலுவலகத்தில் நேரில் பெற இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்