கூடலூரில் பாலித்தீன் பைகளை பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்

கூடலூரில் பாலித்தீன் பைகளை பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.;

Update: 2023-08-27 21:00 GMT

கூடலூரில் பாலித்தீன் பைகளை பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

பாலித்தீன் பைகள்

தேனி மாவட்டத்தில், தமிழக-கேரள எல்லையில் கூடலூர் நகரம் அமைந்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கேரளாவை சேர்ந்த மலைக்கிராம மக்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கூடலூருக்கு வருகை தருகின்றனர். இதற்காக கூடலூர் நகரில் ஏராளமான மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகளும், ஓட்டல், பேக்கரிகளும் உள்ளன.

இந்தநிலையில் கூடலூரில் உள்ள பெரும்பாலான கடைகளில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. மேலும் சாலையோர கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளிலும் பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கூடலூரில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

கடைகளுக்கு அபராதம்

அதைத்தொடர்ந்து கூடலூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கூடலூர் மெயின் பஜார் வீதி, பூக்கடை வீதி, பழைய பஸ் நிறுத்தம், திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகளிலும், அங்குள்ள குடோன்களிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது 3 கடைகளில் சுமார் 500 கிலோ பாலித்தீன் பைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாலித்தீன் பைகளை பதுக்கி வைத்திருந்த கடைக்காரர்களுக்கு தலா ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் குடோனில் இருந்த பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோன்று வருங்காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகளை பயன்படுத்தினால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்