காய்ந்த சந்தன மரத்தை கடத்த முயன்றவருக்கு அபராதம்
கடையம் அருகே காய்ந்த சந்தன மரத்தை கடத்த முயன்றவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடையம்:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அம்பை வனக்கோட்டம் கடையம் வனச்சரகம் கடையம் பீட் வெளிமண்டல பகுதியில் ராமநதி அணை அருகில் காய்ந்து விழுந்து கிடந்த சந்தன மரத்தை கடத்த முயற்சி நடப்பதாக கடையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஆசீர்வாதபுரம் பகுதியைச் சேர்ந்த லிங்கம் மகன் வெள்ளத்துரை என்பவர் சந்தன மரத்தை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். இதில் மேலும் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.