சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்

சுரண்டை அருகே சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

Update: 2023-08-10 19:00 GMT

சுரண்டை:

சுரண்டை அருகே அச்சங்குன்றத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட இருப்பதாக கூறி இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. தொடர்ந்து ஒரு தரப்பினர் நடத்தும் பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்பாமலும், மற்றொரு தரப்பினர் வகுப்புகளை புறக்கணித்தும் வருகின்றனர். அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளின் பேரில் கடந்த ஆண்டு தேர்வு எழுத பிற பள்ளிகளின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய கல்வியாண்டு தொடங்கிய பின்னரும், ஏற்கனவே படித்து வந்த பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பாமல் மாநில அரசு சார்பில் ஒரு நடுநிலைப்பள்ளி அல்லது மத்திய அரசு சார்பில் ஒரு நவோதயா பள்ளி அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஊர் கோவிலில் வைத்து பாடம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து பள்ளி மாணவர்களின் நலன் கருதி தென்காசி உதவி கலெக்டர் லாவண்யா தலைமையில் அச்சங்குன்றத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. வீரகேகரளம்புதூர் தாசில்தார் அழகப்பராஜா, கல்வி அதிகாரிகள் அருளானந்தம், முத்தையா, லோகநாதன், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பர்னபாஸ், கிராம நிர்வாக அலுவலர் அந்தோணிராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அச்சங்குன்றம் கிராம மக்கள் சார்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளத்துரை, நாட்டாண்மை தாராசிங், பா.ஜ.க. செயலாளர் ராஜேந்திரன், பா.ஜ.க. தலைவர் விஜயன் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பள்ளி அமைக்க எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமாக கூறினர். மாணவ- மாணவிகள் நலன் கருதி ஏதாவது ஒரு பள்ளியில் சேர்க்கும் படி கேட்டுக் கொண்டனர். ஆனால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு அரசு பள்ளிதான் வேண்டும். அதுவரை கோவில் வளாகத்தில் தான் பள்ளி நடத்துவோம். தங்களது பிள்ளைகளை வேறு பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்