கயத்தாறு:
கயத்தாறு ஊருக்குள் அனுமதிக்கப்பட்ட அனைத்து மண்டல பஸ்களும் வந்து செல்லக்கோரி அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி சாலை மறியல் அறிவித்தனர். இதுதொடர்பாக கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் நேற்று சமாதான கூட்டம் நடந்தது.
தாசில்தார் சுப்புலட்சுமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மதுரை மண்டல வணிக பொது மேலாளர் அசோக் குமார் மற்றும் நாகர்கோவில் மண்டல போக்குவரத்து கழக வணிக பொது மேலாளர் மகாதேவன், கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து பஸ்களும் கயத்தாறு ஊருக்குள் வந்து செல்வதற்கும், சாலைப்புதூர் சுங்கச்சாவடியில் புறவழிச் சாலை பஸ்கள் நின்று செல்வதற்கும், கயத்தாறுக்கு தனியாக பஸ்நிறுத்தம் வழங்குவதற்கும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.