பரி.திரித்துவ ஆலயத்தில் பாயாச பண்டிகை
கடையம் அருகே பரி.திரித்துவ ஆலயத்தில் பாயாச பண்டிகை நடந்தது.;
கடையம்:
கடையம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கொடிய காலரா நோய்க்கு அதிகமான மக்கள் பலியாகினர். இதனால் அரிசி, தேங்காய் முதலான பாயாசத்துக்கு தேவையான பொருட்களை நேர்ச்சையாக வீடு வீடாக சென்று பெற்று ஆண்கள் தண்ணீர் சுமந்து வந்து பாயாசம் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர். அதன் பிறகு நோயின் தாக்கம் குறைந்துள்ளது.
இதனை நினைவு கூறும் வகையில் மேட்டூர் சி.எஸ்.ஐ. பரி. திரித்துவ ஆலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் பாயாச பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பாயாச பண்டிகை கொண்டாடப்பட்டது. மேட்டூர் சேகர உதவி குரு ஜோயல் சாம் மெர்வின் ஜெபம் செய்து பண்டிகையை தொடங்கி வைத்தார். விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.