கோத்தகிரியில் வாகன நிறுத்துமிடமாக மாறிய நடைபாதை-விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோத்தகிரி நகரின் முக்கிய சாலையோரங்களில் நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயத்துடன் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2023-08-24 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி நகரின் முக்கிய சாலையோரங்களில் நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயத்துடன் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

போக்குவரத்து நெரிசல்

கோத்தகிரி நகர் பகுதி சுற்றுவட்டாரங்களில் உள்ள சுமார் 250 குக்கிராமங்களுக்கு மையப்பகுதியாக அமைந்துள்ளது. இங்கு தாசில்தார் அலுவலகம், கோர்ட்டு, அரசு கருவூலம், போலீஸ் நிலையம், பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள், பத்திரப் பதிவு அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ளதால் கோத்தகிரி நகர் பகுதி போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. மேலும் கோத்தகிரி பகுதியில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய வாகனங்கள் நிறுத்துமிடம் அரசு மற்றும் தனியாரால் ஏற்படுத்தப்படவில்லை. எனவே வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

போக்குவரத்து போலீசாரும் தொடர்ந்து, விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் கோத்தகிரி காமராஜர் சதுக்கத்திலிருந்து டானிங்டன் செல்லும் சாலையோரங்களில் உள்ள நடைபாதைகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ராம்சந்த் சதுக்கம் செல்லும் சாலையோர நடைப்பாதைகள், பஸ்நிலையம் பகுதியில் உள்ள நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதையில் வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் பொதுமக்கள், மாணவ -மாணவிகள் நடைபாதையில் நடக்க முடியாததால் விபத்து அபாயத்துடன் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்