நான்கு வழிச்சாலையை கடப்பதற்கு நடைபாதை அமைக்க வேண்டும்

பழனி அருகே புஷ்பத்தூரில் நான்கு வழிச்சாலையை கடப்பதற்கு நடைபாதை அமைக்க வேண்டும் என்று ஆர்.டி.ஓ.விடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2023-08-08 15:20 GMT

நான்கு வழிச்சாலை

திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு, பழனி வழியாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்காக பழனி அருகே உள்ள புஷ்புத்தூர் கிராமத்தின் மையப்பகுதியில், நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த கிராமம் 2 ஆக பிரிந்து விட்டது.

இதனால் சாலையின் ஒரு புறத்தில் இருந்து, மற்றொரு புறத்துக்கு வர வேண்டுமானால் சாலையை கடக்க வேண்டியுள்ளது. சாலையை கடப்பதற்கு நடைபாதை எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி வந்து சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு திரண்ட மக்கள்

குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மிடாப்பாடி, போதுப்பட்டி, நல்லூர் உள்ளிட்ட 4 கிராம மக்களும் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே புஷ்பத்தூர் கிராமத்தில் சாலையை கடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி மகேஸ்வரன் தலைமையில், கிராம மக்கள் பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், ஆர்.டி.ஓ. சரவணனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், நான்கு வழிச்சாலையை கடந்து செல்வதற்கு புஷ்பத்தூர் கிராமத்தில் நடைபாதை அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்