பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் குவிந்தனர்
தொடர் விடுமுறைையயொட்டி நெல்லையில் ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் குவிந்தனர்.
ஆயுத பூஜையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை, கோவை, பெங்களூரு, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் குடியிருந்து வரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம் முதல் புறப்பட்டு வருகிறார்கள். இதேபோல் நெல்லையில் வசிக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கடந்த 2 நாட்களாக சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.
பயணிகள் கூட்டம்
இதையொட்டி நெல்லையில் ரெயில் மற்றும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்ட குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ், மாலையில் புறப்பட்டு சென்ற நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி, அனந்தபுரி, நெல்லை, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.
இதேபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி, பாபநாசம், சங்கரன்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்ற பஸ்களில் மக்கள் போட்டி போட்டு ஏறிச் சென்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் சிறப்பு பசுக்களை இயக்கினார்கள்.