திருப்பூரில் இருந்து தொலைதூர அரசு பஸ் சேவை திருப்தியாக இல்லை

திருப்பூரில் இருந்து தொலைதூர அரசு பஸ் சேவை திருப்தியாக இல்லை

Update: 2022-10-14 17:06 GMT

திருப்பூர்

பனியன் தொழில் நகரான திருப்பூரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். பலர் குடும்பத்துடன் வாடகை வீட்டில் குடியேறி வேலை செய்கிறார்கள். சிலர் சொந்தமாக வீடு வாங்கி குடியேறிவிட்டனர். ஆண்டு முழுவதும் தொழில்நிறுவனங்களில் பணியாற்றினாலும் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதை தொழிலாளர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதன்காரணமாக தீபாவளி, பொங்கல் மற்றும் விசேஷ காலங்களில் திருப்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அதிகப்படியான மக்கள் பயணம் செய்வது வாடிக்கை. பஸ் போக்குவரத்தை தொழிலாளர்கள் நம்பியுள்ளனர்.

திருப்பூரில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கடலூர், நெல்லை, திருச்செந்தூர், நாகர்கோவில், ராமேசுவரம், தூத்துக்குடி, கும்பகோணம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை போன்ற பகுதிகளுக்கு தொலைதூர பஸ்கள் இயக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 35 பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதவிர சென்னை போன்ற நகரங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் கோவையில் இருந்து இயக்கப்படுகிறது.

போதுமான பஸ்கள் இல்லை

தென்மாவட்ட பஸ்கள் அனைத்தும் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளி, சனிக்கிழமை இரவுகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். விசேஷகாலமாக, விடுமுறை நாட்களாக இருந்தால் அதிகப்படியான பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆனால் அந்த நேரத்தில் தென்மாவட்டம் உள்ளிட்ட தொலைதூர பஸ்களின் எண்ணிக்கை குறைவாகவே இயக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

இரவு 11 மணிக்கு மேல் அரசு பஸ் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது. அதுபோன்ற காலங்களில் குழந்தைகளோடு குடும்பத்துடன் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் பொறுமையை இழந்து சாலைமறியலில் ஈடுபடும் அளவுக்கு சென்று விடுகிறார்கள். விடிய, விடிய காத்திருக்கும்போது கைக்குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். அந்த காலத்தில் கூட பஸ்கள் போதிய இடைவெளியில் தகுந்த எண்ணிக்கையில் இயக்காமல் இருப்பதே இந்த பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.

மெதுவாக இயக்கப்படுவதால் தாமதம்

அதற்கு அடுத்ததாக ஏழை, எளிய மக்கள் அரசு பஸ்களை நம்பியே இருக்கிறார்கள். காரணம் அரசு பஸ்களில் பயண கட்டணம் குறைவு என்பது தான். ஆனால் அந்த அரசு பஸ்களின் பராமரிப்பு என்பது மோசமாக உள்ளது. இருக்கைகள் உடைந்தும், ஜன்னல் கண்ணாடி சேதம் அடைந்தும் காணப்படுகிறது. இரவு நேரத்தில் ஜன்னலை மூட முடியாமல் குளிரில் நடுங்கியபடியே செல்லும் பயணிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுபோல் இருக்கைகள் உடைந்து சமாளித்துக்கொண்டு பயணம் செய்யும் நிகழ்வுகளும் நடந்தேறி வருகிறது. அதுபோல் கண்ணாடிகள் உடைந்து அதற்கு ஒட்டுப்போட்டும் இயக்கி வருகிறார்கள்.

பொருளாதாரம் காரணமாகவே அரசு பஸ்களில் பயணம் செய்யும் நிலையில் ஏழை மக்கள் உள்ளனர். ஆனால் தொலைதூர பஸ்களில் ஏறி குறிப்பிட்ட நேரத்துக்குள் தாங்கள் சென்றடைய வேண்டிய ஊருக்கு செல்ல முடியாமல் தாமதத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது என்பது பயணிகளின் குமுறலாகவே உள்ளது. அரசு பஸ்கள் வேகம் குறைவாகவே இயக்கப்படுகிறது. இடையில் உணவகங்களில் நிறுத்தி அதன்பிறகு எடுத்து செல்கிறார்கள். அவ்வாறு நிறுத்தும் இடங்களில் கழிப்பிட வசதி கூட சரிவர இல்லாமல் இருப்பதாக ஆதங்கத்தை தெரிவிக்கிறார்கள். அரசு பஸ்களின் சேவை திருப்பதியாக இல்லை என்பதே மக்களின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.

ஆம்னி பஸ்கள் மீது மோகம்

அதேவேளையில் தனியார் ஆம்னி பஸ்களை நோக்கி மக்கள் பயணப்பட தொடங்கியிருக்கிறார்கள். 2 சிறுவர்களுடன் தாய், தந்தை தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் அரசு பஸ்சில் 4 டிக்கெட் எடுக்க வேண்டும். அதேநேரத்தில் ஆம்னி பஸ்களில் 2 படுக்கை வசதி கட்டணத்தை செலுத்திவிட்டால் 4 பேரும் குடும்பமாக சென்றுவிடலாம். தூங்கியபடி செல்ல முடியும். தகுந்த இடங்களில் இறங்க முடியும். டிரைவர், கண்டக்டர்களின் அணுகுமுறை நன்றாக உள்ளது. இருக்கைகளில் பயணிகள் நிரம்பாவிட்டாலும் தகுந்த நேரத்தில் நாம் செல்ல வேண்டிய ஊருக்கு கொண்டு சேர்த்துவிடுகிறார்கள். கட்டணம் அதிகமாக இருந்தாலும் மற்ற வசதிகளுக்காக ஆம்னி பஸ்சில் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் திருப்பூரில் இருந்து தொலைதூர ஊர்களுக்கு சமீபகாலமாக அதிகப்படியான ஆம்னி பஸ்கள் இரவு நேரத்தில் இயக்கப்படுகிறது. இது மக்கள் ஆம்னி பஸ்சின் மேல் உள்ள மோகத்தை காட்டுகிறது.

லாப நோக்கம் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அரசு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திகொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து பஸ் பயணிகள் தங்கள் கருத்துகளை கூறியதாவது:-

பயணிகள் கருத்து

பயணி கருப்பசாமி (தாராபுரம்):-

அரசு பஸ்களைவிட தனியார் ஆம்னி பஸ்கள் வசதியாக இருப்பதால் மக்கள் பெரும்பாலும் தனியார் பஸ் பயணத்தை விரும்புகின்றனர். தனியார் பஸ்கள் எல்லா இடத்திலும் நின்று செல்கிறது. அதனால் நமக்கு வேண்டிய இடத்தில் இறங்க முடிகிறது. ஆனால் அரசு பஸ்கள் அப்படி எல்லா இடத்திலும் நின்று செல்வது இல்லை. நிறுத்தும்படி கேட்கும்போது நடத்துனர்கள் சில நேரங்களில் திட்டுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் வேதனையடைகின்றனர்.

பயணி அய்யனார் :-

தனியார் பஸ்கள் அரசு பஸ்களைவிட வேகமாக செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேருகிறது. இதனால் நேரம் மிச்சமாகிறது. அதேசமயம் சில அரசு பஸ்கள் ஓட்டையுடனும், உட்காரும் இருக்கைகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் பஸ்சிற்குள் வருகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் சிரமத்துடன் பயணம் செய்கின்றனர். ஆனால் தனியார் பஸ்கள் சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் இருக்கிறது. எனவே அரசு பஸ்களை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாலகிருஷ்ணன் (தென்னம்பாளையம்):-

பண்டிகை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள விரும்பும் நபர்கள் முன்கூட்டியே தனியார் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்கின்றனர். அதனால் அந்த நாட்களில் குடும்பத்துடன் சவுகரியமாக பயணம் செய்ய முடிகிறது.

தனியார் பஸ்களில் பயணிகள் வந்துவிட்டால் சீக்கிரம் பஸ்களை எடுத்துவிட்டு செல்ல வேண்டிய இடத்திற்கு விரைந்து சென்றுவிடுவார்கள். ஆனால் அரசு பஸ்கள் ஒவ்வொரு நிறுத்தத்திலும் நிறுத்தி பயணிகள் வர வர அவர்களை ஏற்றிக்கொண்டு உட்கார இடம்கூட கிடைக்காமல் சில சமயங்களில் பயணிக்கிறது. இதனால் பொதுமக்கள் இடநெருக்கடியால் அவதிப்படுகின்றனர். எனவே இதற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டால் நன்றாக இருக்கும்.

பயணி ஜெயராம் (கொடுவாய்):-

வசதியான, மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்ள விரும்பும் நபர்கள் தனியார் பஸ் பயணத்தை தேர்வு செய்கின்றனர். குறிப்பாக தனியார் பஸ்களில் பாடல்கள், அழகிய ஒளி விளக்குகள் போன்றவை இருப்பதால் பெரும்பாலான பிள்ளைகள், இளைஞர்கள் அதில் பயணிக்க விரும்புகின்றனர். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மக்கள் அரசு பஸ் பயணத்தையே நாடுகின்றனர். எனவே அரசு பஸ்களை பராமரித்தால் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பயணிகளுக்காக காத்திருக்கிறார்கள்

பர்வீன் (காங்கயம்பாளையம்):-

நான் தேனிக்கு செல்வதற்காக கோவில்வழி பஸ் நிலையம் வந்துள்ளேன். அரசு பஸ்களைவிட தனியார் பஸ்கள் சீக்கிரம் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்வதால் நேரம் மிச்சமாகிறது. மேலும் தனியார் பஸ்கள் பயணிகளை நின்று ஏற்றி செல்கிறது. ஆனால் அரசு பஸ்கள் அப்படி செய்வது இல்லை. குறிப்பாக சில சமயங்களில் படியில் ஏறுவதற்குள் பஸ்களை எடுக்கின்றனர். இதனால் தடுமாறி கீழே விழக்கூடிய சூழல் உருவாகிறது. அப்போது திட்டுக்கின்றனர். இதனால் மனஉளைச்சலுக்கு மக்கள் ஆளாகின்றனர்.

தனியார் பஸ்களில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அணுகுமுறை நன்றாக இருக்கிறது. அக்கறையாக நடந்து கொள்கின்றனர். முன்பதிவு செய்து பஸ் ஏற வர தாமதம் ஆகும்போது போன் செய்து கேட்கின்றனர். அருகில் இருக்கிறோம், வந்துவிடுகிறோம் என்று சொல்லும்போது காத்திருக்கின்றனர். ஆனால் அரசு பஸ்களில் அப்படி நடப்பதில்லை. இதனால் கூட மக்கள் தனியார் பஸ்களில் அதிக கட்டணமாக இருந்தாலும் பரவாயில்லை என்று பயணம் மேற்கொள்ள தயாராக இருக்கின்றனர்.

ஜாகிதா பேகம் (திருப்பூர்):-

தனியார் பஸ்களின் கட்டணம் அரசு பஸ்களைவிட அதிகமாக இருந்தாலும் வயதானவர்கள் பயணம் செய்ய தனியார் பஸ்கள் வசதியாக உள்ளது. ஆனால் அரசு பஸ்களில் வயதானவர்கள் செல்லும்போது கை, கால்வலி, மூட்டுவலி போன்றவை ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது. எனவே தனியார் பஸ் பயணம் நன்றாக இருக்கிறது.

ஆண்கள் இருக்கை மற்றும் பெண்கள் இருக்கை என்று பஸ்களில் தனியாக பிரித்து இருந்தாலும் பெரும்பாலும் தனியார் பஸ்களே இதனை அதிகம் பின்பற்றுகிறது. அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது சில சமயங்களில் பெண்கள் கடைசி இருக்கையில்கூட அமர்ந்து பயணம் செய்கின்றனர். இதனால் தனியார் பஸ்களில் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம் உள்ளது. மேலும் மதுப்பிரியர்களின் தொல்லையும் அரசு பஸ்களில் அதிகம் இருக்கிறது.

இவ்வாறு பயணிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

இது குறித்து அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சமயத்தில் கொரோனா காலத்திற்கு முன் 20 சதவீதம் போனஸ் வழங்கினர். பிறகு கொரோனாவினால் இந்த சதவீதம் 10ஆக குறைந்தது. இப்போது தொடர்ந்து 10 சதவீதமாகவே உள்ளது. எனவே இந்த சதவீதத்தை உயர்த்தி வழங்கினால் நன்றாக இருக்கும்.

மேலும் தென்மாவட்டங்களுக்கு அதிக பஸ்களை இயக்கும்படி மக்கள் கேட்கின்றனர். பண்டிகை நாட்களில் அப்படி செய்யும்போது மக்கள் நன்மை அடைவார்கள். ஆனால் மற்ற சமயங்களில் அப்படி இயக்கும்போது பயணிகள் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் பஸ்களை இயக்குவதற்கு டிரைவர் பற்றாக்குறை உள்ளது. எனவே இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறுஅவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்