கிளாம்பாக்கத்தில் அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து பயணிகள் போராட்டம் - போலீசார் பேச்சுவார்த்தை

கிளாம்பாக்கத்தில் சொந்த ஊர் செல்ல போதிய பேருந்துகள் இல்லை என்று குற்றம்சாட்டிய பயணிகள், அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-20 21:29 GMT

சென்னை,

சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையித்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று பவுர்ணமி தினம் என்பதால் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் பவுர்ணமி தினம் என்பதால் திருவண்ணாமலைக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், பிற ஊர்களுக்கு குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் பயணிகள் புகார் தெரிவித்தனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, ஜெயங்கொண்டான், பண்ருட்டி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதியடைந்தனர்.

இந்த நிலையில் சொந்த ஊர் செல்ல போதிய அரசு பேருந்துகள் இல்லை என்று குற்றம்சாட்டிய பயணிகள், அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இரவு 10 மணி முதல் பேருந்துக்காக குழந்தைகளுடன் காத்திருப்பதாகவும் பயணிகள் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்