ரெயில் நிலையங்களில் பயணிகளின் செல்போன்கள் திருட்டு - சிறுவன் உள்பட 2 பேர் கைது
ஓட்டலில் அறை எடுத்து தங்கி செல்போன்கள் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
சென்னை,
சென்னையில் கடந்த ஒரு வாரமாக எழும்பூர், சென்டிரல், கடற்கரை, தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணிகளின் செல்போன்கள் திருட்டு குறித்து 20-க்கும் மேற்பட்ட புகார்கள் ரெயில்வே போலீசாருக்கு வந்தது. இதையடுத்து ரெயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவின்பேரில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரெயில் நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று சிறுவன் உட்பட 2 பேர் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிவதை கண்ட போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், மேற்கு வங்காளத்தை சேர்ந்த அனில் குமார் நோனியா (வயது 23), மற்றொருவன் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் கடந்த 20-ந்தேதி விமானம் மூலம் சென்னை வந்ததும், ஓட்டலில் அறை எடுத்து தங்கி, பல ரெயில் நிலையங்களில் பயணிகளின் சொல்போன்களை திருடியதும் தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 22 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.