வேளாங்கண்ணிக்கு கூடுதல் பஸ் இயக்கக்கோரி பயணிகள் சாலைமறியல்

வேளாங்கண்ணிக்கு கூடுதல் பஸ் இயக்கக்கோரி பயணிகள் சாலைமறியல்;

Update: 2023-04-07 18:45 GMT

சீர்காழியில் இருந்து வேளாங்கண்ணிக்கு கூடுதல் பஸ் இயக்கக்கோரி பயணிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் கொண்டல், மன்னிப்பள்ளம், குமாரமங்கலம், திருப்புங்கூர், கொள்ளிடம், பழைய பாளையம், தாண்டவன்குளம், அத்தியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பயணிகள் வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெறும் புனித வெள்ளி வழிபாட்டில் பங்கேற்க பஸ்சில் செல்வதற்காக சீர்காழி பஸ் நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு வந்தனர். இரவு 9 மணியில் இருந்து பஸ்களில் அதிக அளவு கூட்டம் இருந்ததால் அடுத்தடுத்த பஸ்களில் ஏறலாம் என பயணிகள் காத்திருந்தனர். ஆனால் 11 மணி வரை வேளாங்கண்ணிக்கு பஸ்கள் எதுவும் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வேளாங்கண்ணி செல்லும் பயணிகள் புதிய பஸ் நிலையம் எதிரே சிதம்பரம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் புனித வெள்ளியையொட்டி வேளாங்கண்ணிக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கூறி கோஷமிட்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு வந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வேளாங்கண்ணி செல்ல எதுவாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு மீண்டும் பஸ்சுக்காக அப்பகுதியில் காத்திருந்து பயணிகள் பஸ் ஏறி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்